பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்
பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும், ம.பொ.சிவஞானம், சந்தியா பதிப்பகம், பக். 160, விலை 130ரூ.
அந்நிய ஏகாதிப்த்தியத்திடமிருந்து இந்தியா விடுதலை பெற்றது ஒரு மகத்தான வரலாறு. சுதேசமன்னர்களின் எதிர்ப்புப் போராட்டம், பிரிட்டிஷ் ராணுவத்திலிருந்த இந்திய வீரர்களின் கலகம், காங்கிரஸ் மகாசபையின் தோற்றம் ஆகியவற்றை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வின் உடனடி வெளிப்பாடாக, நாட்டின் பல இடங்களில் ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் தலைதூக்கின.
பகத்சிங், வாஞ்சிநாதன் போன்றோர் இதற்கு உதாரணங்கள். ஆனால் அவை முளையிலேயே கொடூரமாக நசுக்கப்ட்டன. இந்த நேரத்தில்தான் அகிம்சையை ஆயுதமாகக் கொண்ட காந்தியின் இந்திய அரசியல் பிரவேசம் 1919-இல் நிகழ்ந்தது.
அந்தப் போராட்ட முறை இந்தியாவில் எப்படி அறிமுகமானது, காந்தியடிகளைப் பின்னிருந்து இயக்கிய தமிழகத்தின் சிறப்பு என்ன என இந்நூலில் தெளிவுற விளக்கி இருக்கிறார் ம.பொ.சி., காந்தியடிகள் தனது அற ஒழுக்கத்தால் அகிம்சையையும் சத்தியத்தையும் எப்படி விடுதலைப்போரின் ஆயுதங்களாக்கினார் என்பதை விளக்குகிறார். தேசம் காந்தியை உணர்வதற்கு முன்னதாகவே, மகாகவி பாரதி அவரை ‘மகாத்மா’ என்று பாடியதையும் ம.பொ.சி. குறிப்பிடுகிறார்.
விடுதலைப் போராட்டக் கால வரலாற்றை நேரடியாக அறிந்த ஒருவரது அனுபவ நூல் இது என்பது தனிச்சிறப்பு. சில பக்கங்களில் கூறியது கூறல் வருவது சிறு குறை. எனினும், சரித்திரத்தில் தேர்ச்சி கொள்ள விரும்புவோர் பயில வேண்டிய அரிய நூல் இது.
நன்றி: தினமணி, 4/4/2016.