பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (எ) துளசிதாசரின் அஷ்டப் பிரபந்தம்
பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் (எ) துளசிதாசரின் அஷ்டப் பிரபந்தம் , தொகுப்பாசிரியர்: கோ. எழில்வேந்தன், கவிதா பப்ளிகேஷன், பக்.416; விலை ரூ.300
அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப்பண்டிதன் என்னும் புகழ்ச் சொல்லுக்கு உரியது இந்நூல். இதை இயற்றிய பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் திவ்யகவி அதாவது தெய்வத் தன்மை பெற்ற கவி எனப் புகழப்படுபவர்.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்குப் பிறகு தமிழ் வைணவ நூல்களில் மிகவும் போற்றுதற்குரியதாக அஷ்டப் பிரபந்தம் விளங்குகிறது. பிரபந்தத்தின் கருத்துச் செறிவு, வைணவ குருபரம்பரையைச் சேர்ந்த அருளாளர்களின் வைபவங்கள் அடங்கியது இது.
திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்து மாலை, திருவரங்கத்து அந்தாதி, சீரங்க நாயகர் ஊசல், திருவேங்கட மாலை, திருவேங்கடத்து அந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி ஆகியவற்றுடன் பிற்சேர்க்கைப் பாடல்களும் அடங்கியுள்ளது இந்த நூல். சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றிய இந்நூல், வைணவ பக்தி இலக்கியத்துக்கே சொல்லின்பம் சொட்டுவதாகும்.
எளிதாகப் படிப்பதற்கு உதவும் விதமாகப் பிரபந்தப் பாடல்களைச் சீர் பிரித்து அளித்திருக்கிறார் தொகுப்பாசிரியர். எளிய தமிழில் பாடல்களுக்குப் பொழிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
வைணவத் தமிழ் இலக்கியக் கோயிலுக்குள் புகுவோர்க்கு இது ஒரு கருவி நூலாக இருக்கிறது என்று தொகுப்பாசிரியர் குறிப்பிடுகிறார். அது மிகவும் பொருத்தமான கருத்து. நூல் இறுதியில் பாடல்கள் முதற்குறிப்பு அகராதி தொகுத்து இருப்பது, பாடல்களை விருப்பம் போல அகர வரிசையில் தேடிப் படிக்க மிக உதவியாக உள்ளது. அருமையான அச்சாக்கத்துடன் நல்ல தயாரிப்பு.
நன்றி: தினமணி, 26/11/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818