பிரபலங்களின் குழந்தைப் பருவம்
பிரபலங்களின் குழந்தைப் பருவம், ப்ரியன், கலைஞன் பதிப்பகம், பக்.168, விலை ரூ.160.
இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் பிரிவில், கவிஞர் வைரமுத்து, சுகிசிவம், டாக்டர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இளமைப் பருவத்தைப் பற்றி கூறுகிறார்கள்.
இரண்டாம் பிரிவில் ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்ஸன், சார்லி சாப்ளின், தமிழ்வாணன், வால்ட் எலியாஸ் டிஸ்னி போன்ற பிரபலங்களின் குழந்தைப் பருவத்தைப் பற்றி நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் பிரிவில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கைக் கதைகள் பதிவாகியுள்ளன. நான்காம் பிரிவில் இயக்குநர் வஸந்த், கவிஞர் பழநிபாரதி, ஓவியர் ஜெயராஜ், குமரி அனந்தன் உள்ளிட்ட 10 பேர் அவரவர் சார்ந்த துறையில் சிறந்து விளங்குவது பற்றிக் கூறுவது தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
நேரடியான அறிவுரைகளை இக்காலத்தில் யாருமே – குறிப்பாக இளைய தலைமுறையினர் விரும்புவதில்லை. வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிரபலங்களின் வாழ்க்கை அனுபவங்கள் இளைய தலைமுறையினரின் பார்வையில் படுமானால், அந்த அனுபவங்களிலிருந்து அவர்கள் பாடங்களைக் கற்றுக் கொண்டு முன்னேற வாய்ப்பு ஏற்படும்.
கர்நாடகத்தின் விஸ்வேஸ்வரய்யா, கலா, க்ஷத்ரா ருக்மணி தேவி, வால்ட் எலியாஸ் டிஸ்னி, தமிழ்வாணன், கல்வி வள்ளல் அழகப்பர் போன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகள், வாழ்க்கையில் பிரகாசிக்க துடிப்பவர்களுக்கு நிச்சயம் வழிகாட்டியாக விளங்கும். இளம்தலைமுறையினருக்குப் பயன்படும் சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 17/7/2017.