சிவனுக்குகந்த மலர்கள்

சிவனுக்குகந்த மலர்கள், கு. சேது சுப்ரமணியன், செங்கைப் பதிப்பகம், பக். 184, வி9லை 120ரூ.

திருமூலர் திருமந்திரத்தில் ‘புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு, அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும்…’ என்று பாடியுள்ளார்.

பூவினால் செய்யும் பூசையால் வரும் புண்ணியங்களையும், பூவின் புகழ் வாசத்தையும் இந்த நூலில் மிக சிறப்பாக நுகரலாம்.

தருமை குரு முதல்வர் குரு ஞானசம்பந்தர் ஞானகுரு கமலை ஞானப்பிரகாசர் புட்பவிதி நூலும், ஸ்ரீ சிதம்பரநாத முனிவரின் நடராச சதகமும் நூலும், பாண்டி அரவிந்த அன்னையின் மலர்களின் தெய்வீக விளக்கமும் கொண்டு இந்த நூல் விரிவாக்கப்பட்டுள்ளது.

சங்கத் தமிழில் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் பாடிய, 99 மலர்களையும், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை பூக்களையும் முதலில் விளக்குகிறார்.
‘தாமரையை ஏழு நாட்களும், அலரியை, மூன்று நாட்களும் பூக்கூடையில் வைத்திருந்தே சாத்தலாம். நீலோத்பலம், ஊமத்தை பொற்பூவுக்கு சமம், நிர்மால்யமாய் விடினும் கழுவி இறைவனுக்கு அணிவிக்கலாம்…’ (பக். 26) இவை போன்ற அருமையான தகவல்கள் உள்ளன.

தேவாரம், திருவாசகம் கூறும் மலர்களும், மலர் வழிபாடுகளும் தரப்பட்டுள்ளன. சம்பந்தரின், ‘சித்தந் தெளிவீர்காள்’ தேவாரமும், அப்பரின் அட்ட புட்ப வழிபாடும் அருமைப் பதிவுகள்.

தல விருட்சகம், மலர்கள், ஊர் பெயர்களில் மலர்கள், மலர்களின் அறிவியல் பெயர்கள், மருத்துவப் பயன்கள் யாவும் விரிவாக தரப்பட்டுள்ளன.

அந்தி மந்தாரை, மல்லிகை, பாரிஜாதம், மாதவி, இருவாட்சி, தாமரை மலரும், ஏழு நாளுக்கு ஏற்ற மலர்கள், இலைகள், பூ பறிக்கும் முறைகள், சிவனுக்கு ஆகாத மலர்கள், அம்பிகைக்கு உகந்த மலர்கள் என்று அரிய தகவல்கள் உள்ளன.

மலர்களுக்கு மகுடம் சூட்டும் நூல். கூடையின்றி பூப்பறிக்க முடியாது; பொருளடக்கம் தலைப்புகள் முன்னே இல்லாமல் நூலை பிரித்து படிக்க முடியாது; ஏன் தரவில்லை, தெரியவில்லை.

– முனைவர் மா.கி.ரமணன்

நன்றி: தினமலர், 2/7/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *