புரட்சியாளன்
புரட்சியாளன், ஆல்பர்ட் காம்யூ, ப்ரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா, காலச்சுவடு பதிப்பகம், விலை 475ரூ.
ஆல்பர்ட் காம்யூவின் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இது. நாம் வாழும் காலத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் இன்று வரைக்கும் இந்த நூல் உதவிக் கொண்டே வருகிறது.
நிச்சயமற்ற உலகில் வாழக்கூடிய அனைத்து சூழலையும் காம்யூ அவரின் வார்த்தைகளில் பிரத்யேகமாக எழுதிச் செல்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் அடுத்தடுத்த கணத்தில் ஒருமை கூடி நிற்கிறது. மிகவும் கவனம் தேவைப்படுகிற நினைவையும் உணர்வையும் சேர்த்து ஒருங்கிணைந்து படிக்க வேண்டிய கட்டுரைகள்.
நம் வாழ்க்கையின் சாத்தியமின்மைகளை அக, புற காரணங்களோட காட்டிச் செல்கிறது. ஒரு லட்சிய சமூகம் உருவாகிவிடாமல் எப்படியெல்லாம் சிதறிப்போகிறது என்பதை மிகவும் தீர்க்கதரிசனத்தோடு எழுதுகிறார் காம்யூ. பிரெஞ்சுப் படைப்பாளிகள் உலக இலக்கிய வரலாற்றிலும் சிந்தனை வரலாற்றிலும் ஒரு பெரும் இடத்தை ஆக்ரமித்து இருக்கிறார்கள் என்றாலும் காம்யூவின் இடம் தனித்துவமானது. பிரதி செய்ய முடியாதது. தன் இயல்பானது.
சமயங்களில் தியானம் போல செல்கிற உரைநடை, திடுமென கவனம் செதுக்கி படிக்க வேண்டியதாகிறது. மனித சமூகத்தின் மீதான பெரும் காதலில் காம்யூ தோய்ந்து இருப்பதால், அவரை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம். நேரடி மொழிப்பெயர்ப்பில் நாகரத்தினம் கிருஷ்ணா ஆற்றியிருப்பது பெரும்பணி.
சவால் தந்து உழைப்பைக் கோருகிற இந்த கட்டுரைகளை சுயம்கெடாமல் மொழிபெயர்த்திருப்பது சாதனை..
நன்றி: குங்குமம், 7/7/2017.