புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம்
புலவர் திலகம் கீரன் ஒரு சகாப்தம், செல்லபாப்பா கீரன், பழனியப்பா பிரதர்ஸ், பக். 424, விலை 325ரூ.
பூர்விகம் பாலக்காடு என்ற போதிலும், மயிலாடுதுறையில் வளர்ந்து, தருமையாதீனத் தமிழ் கல்லூரியில் பயின்று, சிறு வயதிலேயே மேடைப் பேச்சிலும், இலக்கியத்திலும் புலமை பெற்று, 1956ம் ஆண்டில், நாகர்கோவிலிலிருந்து விழாவிற்கு தலைமை ஏற்க வந்த ஆறுமுகநாவலரால் (பக். 23) என்பவரால், ‘கீரன்’ என்று பெயர் சூட்டப்பட்ட, ‘வைத்தியநாத சுவாமி’ எனும் இயற்பெயர் கொண்ட புலவர் திலகம் கீரனின் வரலாற்றை, வாழ்விலும், இலக்கியத்திலும் துணை நின்ற அவரது மனைவி, இந்நூலில் சுவைபட எழுதியுள்ளார்.
தமிழகமெங்கும் 20 ஆண்டுகள் தன் நாவன்மையால், ஆன்மிக – இலக்கிய சொற்பொளிவாற்றிய கீரனின் பேச்சின் சாரத்தை, ‘தினமலர் தினத்தாள் மட்டும் தான்’ (பக். 74) அரைப்பக்கத்திற்கு மேல் வெளியிடுவர் என்று குறிப்பிடும் நூலாசிரியர், கீரன், ம.பொ.சி.யுடன் தமிழரசுக் கழகத்தில் ஈடுபட்டதையும், தமிழக எல்லைப் போராட்டத்தில், கீரன் சிறை சென்றபோது, தங்கள் மூத்த மகனுக்கு, ‘தணிகைமணி’ என்று பெயர் சூட்டியதையும் (பக். 309) பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல், இலக்கியம், ஆன்மிகம் என, பலதரப்பட்ட மேடைகளில் முத்திரைப் பதித்து, தேச பக்தி, தெய்வ பக்தியை வளர்ந்த கீரனின் மடலாயத் தொடர்பு, தலைவர்கள் தொடர்பு மற்றம் வெளிநாடுகளில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் என, ஏராளமான தகவல்களை நூலாசிரியர் திறம்பட விவரித்துள்ளதோடு, தமக்குள்ள இலக்கிய ஈடுபாடுகளையும் ஆங்காங்கே இழையோடச் செய்துள்ளார்.
ஆழ்ந்த புலமையும், இலக்கிய, அரசியல் ஞானமும், நாவன்மையால் அனைத்து தரப்பினரையும் தன்பால் ஈர்த்து சொல்வேந்தராய் திகழ்ந்த கீரன், ஒரு சகாப்தம் என்பதை நூலாசிரியர் நிறுவியுள்ளார்.
-பின்னலூரான்.
நன்றி: தினமலர், 3/4/2016