புத்தம் புது பூமி வேண்டும்
புத்தம் புது பூமி வேண்டும், சு. ராஜு, உரத்தசிந்தனை பதிப்பகம், பக். 120, விலை 150ரூ.
ஹைதராபாத்திலுள்ள தேசிய புவி இயற்பியல் ஆய்வுக்கூட முதன்மை விஞ்ஞானியான இந்நூலாசிரியர், நில அதிர்வு ஆய்வுகள் குறித்து இந்தியா முழுவதும் சென்று அரிய தகவல்களைத் திரட்டி வருபவர். இவரது பல ஆய்வு அறிக்கைகள் இத்துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயன்தரத்தக்கவையாக உள்ளன.
விஞ்ஞானியாக இருந்தாலும், எளிய தமிழ் நடையில் எழுதும் ஆற்றல் மிக்கவர். உரத்த சிந்தனை என்ற மாத இதழில் இவர் எழுதிய புவி அறிவியல் குறித்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
பிரபஞ்சம் எப்போது, எப்படித் தோன்றியது என்பது தொடங்கி பூமி, வாயு மண்டலம், கடல், பூமியின் மேற்புற – உட்புற அமைப்புகள், மைய அடுக்கு, முதல் உயிரினம், பல செல் உயிரினம், டைனோசர்கள், மனித இனம்… இப்படிப் பல விஷயங்கள் எப்படி உருவாகின, எதனால் நிலை கொண்டன என்ற பல விபரங்கள் ‘பூமியின் தோற்றமும் அமைப்பும்’ என்ற முதல் கட்டுரையிலே விளக்கப்பட்டுள்ளன.
இதேபோல் புவியீர்ப்பு, நிலநடுக்கம், எரிமலை, புவிவெப்பமாதல், ஓசோன் படலம், காற்று மண்டலம், நீர் மாசுபடுதல்… என்று பல தலைப்புகளில் ஆன ஒவ்வொரு கட்டுரையும் பல்வேறு தகவல்களுடன் ஆய்வு ரீதியாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இயற்கை பேரிடர்கள், செயற்கை பேரிடர்கள் எதனால் ஏற்படுகிறது? அதைத் தடுக்கும் வழிமுறைகள் என்ன என்ற விபரங்களும் இந்நூலில் அழகிய புகைப்படங்கள், வரைபடங்களோடு ஆசிரியர் எளிமையாக விளக்கியுள்ளார்.
இது மாணவர்கள் மட்டுமின்றி, அனைத்துத்தரப்பு மக்களும் அறிந்து, நம் பூமியைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை அடையும் புத்தகமாக உருவாகியுள்ளது பாராட்டத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 14/9/2016.