புற்றுநோயை வெற்றி கொள்ள வேதி சிகிச்சையை (கீமோ தெரபி)யை அறிந்து கொள்வோம்,
புற்றுநோயை வெற்றி கொள்ள வேதி சிகிச்சையை (கீமோ தெரபி)யை அறிந்து கொள்வோம், செ. நடேசன், விஜய்ஆனந்த் பதிப்பகம், பக்.96, விலை ரூ.100.
உலக மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாகப் புற்றுநோய் மாறிவிட்டது. புற்றுநோய்க்கு அளிக்கப்படும் ஒரு சிகிச்சை ஹீமோ தெரபி. ஹீமோ தெரபி பற்றிய விரிவான தகவல்களை இந்நூல் தருகிறது.
ஹீமோ தெரபி மருந்துகளை உடலில் செலுத்தும் பலவிதமான முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அந்த மருந்துகள் உடலுக்குள் சென்று உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களை அழித்துவிடுகின்றன.
எனினும் இந்த மருந்துகளினால் முடிகொட்டுதல், எலும்பு மஜ்ஜை தயாரிக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து போதல், இதனால் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து எளிதில் பிற தொற்றுநோய்கள் தொற்றிக் கொள்ளுதல், ரத்த சோகை ஏற்படுதல், ரத்தத்தின் உறையும்தன்மை குறைந்துபோதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
குமட்டல், வாந்தி ஏற்படுதல், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சுவை உணர்வில் மாற்றம் ஏற்படுதல், நரம்புகளில் பாதிப்பு, வாயில் புண் போன்ற பலவிதமான பாதிப்புகள் ஏற்படக் கூடும். இப்படிப்பட்ட பக்கவிளைவுகள் வந்தால் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்நூல் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக ஹீமோ தெரபி எடுத்துக்கொண்டவர்கள் எவ்வாறு தங்களுடைய உடலை, மனதை வைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்நூல் விளக்குகிறது.
போதுமான நிதியை மத்திய, மாநில அரசுகள் மருத்துவத்துறைக்கு ஒதுக்காதது, இந்தியாவில் புற்றுநோயால் அதிகமான நோயாளிகள் மரணமடைவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது என்கிறார்.
நன்றி: தினமணி, 08/5/2017.