ரத்தத்தின் ரத்தமே
ரத்தத்தின் ரத்தமே, எஸ்.ரஜத், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160.
நிறமும், அழகும் கடவுள் நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறார். ஒரு சிலர் தான் நிறம், அழகைத் தாண்டி, நல்ல குணத்தால் காலமெல்லாம் தன் புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றனர். எம்.ஜி.ஆர்., தியேட்டரைத் தாண்டி, மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த நிரந்தர முதல்வர். சிம்லாவில் நம் ராணுவத்தினரை ரசிக்க வைத்த கலாரசிகன். படப்பிடிப்பின் போது உடல் களைத்தாலும், மனம் களைக்காமல் ரசிகர்களை கொண்டாடும் தலைவன்.
கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும் என்பதை மக்களின் வேண்டுதல் மூலம் உயிர்ப்பித்து, மீண்டும் வெற்றிக் கொடி நாட்டியது. அமெரிக்காவில் எம்.ஜி.ஆர்., சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட, ‘வீடியோ’வை, சிங்கப்பூர் சென்று தொழில்நுட்ப ரீதியாக மாற்றி, எப்படி இந்தியாவில் பயன்படுத்தி மீண்டும் முதல்வரானார் என்பதை ஆசிரியர் ரஜத் விறுவிறுப்பாக விளக்கும் விதம், கில்லி பட ஸ்டைல்.
எம்.எஸ்.விஸ்வநாதனின் முதல் பட இசையமைப்பு, எம்.ஜி.ஆரின் ஜெனோவா படத்திற்கு. இசையமைத்த நான்கு பாடல்களையும் கேட்டு, விஸ்வநாதனின் அறைக்கே வந்து கட்டித் தழுவிய மனப்பான்மை எத்தனை பேருக்கு வரும். திருமண விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசை கச்சேரி முடியும் வரை, டின்னருக்கு தடை போட்ட இசைநேசன்.
‘பொன் அந்தி மாலைப் பொழுது… பொங்கட்டும் இன்ப உறவு…’ பாட்டுக்காக மூன்று டியூன்களை ஒன்றாக்கி, இசையமைப்பாளர்களை அசர வைத்த சாமர்த்தியம்… பிரமிக்க வைத்த ஆளுமைகள் ஒன்று கூடி, எம்.ஜி.ஆர்., என்ற பொக்கிஷத்துடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்ட விதம், படிக்க படிக்க திகட்டாமல் பரவசம் ஊட்டுகிறது.
ஆசிரியர் ஆசிரியராக கதையை நடத்திச் செல்லவில்லை. அந்தந்த அனுபவங்களின் கோர்வையாக அவரே சொல்வது போல எழுதியது இன்னும் சிறப்பு. பார்வையாளனாக ஆசிரியரும் புத்தகத்தை கடந்து செல்கிறார். அதனால் தான், எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரின் வரலாற்று சுவாரஸ்யங்களை விறுவிறுப்பு குறையாமல், புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் படிக்க முடிகிறது. படித்து முடித்ததும், எம்.ஜி.ஆர்., என்ற ஆளுமை அரசியல், கட்சி பேதமின்றி மனங்களை புதிதாக தழுவிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.
– எம்.எம்.ஜெ.,
நன்றி: தினமலர்,25/4/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031360_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818