சந்தித்ததும் சிந்தித்ததும்
சந்தித்ததும் சிந்தித்ததும், வெ.இறையன்பு, விஜயா பதிப்பகம், பக்.280, விலை ரூ.200.
வாழ்வில் ஒவ்வொரு நாளும் பலவிதமான மனிதர்களை நாம் சந்தித்த வண்ணம் இருக்கிறோம். அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது என்கிறார் இறையன்பு.
‘ஆரோக்கியமான பார்வையோடு உலகத்தைப் பார்த்தால் அத்தனை மனிதர்களுமே சுவாரசியத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள் என்ற உண்மை நமக்குப் புரியும்‘ என்கிறார் நூலாசிரியர். தான் சந்தித்த அத்தகைய மனிதர்கள் குறித்த சிறு குறிப்புகளை இலகுவான வாசிப்புக்கு ஏற்ற நடையில், ஆங்கிலத்தில் இனிய மேற்கோள்களுடன் 50 கட்டுரைகளாக அவர் வடித்திருக்கிறார். அவற்றின் தொகுப்பே இந்நூல்.
இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும், நம்மை வியக்கச் செய்கிற, விம்மச் செய்கிற, நம்மை நாமே பரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிற பலரைச் சந்திக்கிறோம். போகிற போக்கில் தனது மனதை உறுத்திய சில நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். சாதாரண மனிதர்களிடமும் நாம் அறிய வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.
‘நாமாகப் படித்துக் கற்றவை சொற்பம். கேட்டும், கவனித்தும், கற்றுக்கொண்டவையே அதிகம். மனிதர்களில் சிலர் புத்தகமாக இருக்கிறார்கள். ஒருசிலர் நூலகமாக இருக்கிறார்கள்‘ என்று நூலின் இறுதியில் இறையன்பு குறிப்பிடுகிறார்.
படிக்க விறுவிறுப்பாகவும், படித்து முடித்தவுடன் புதிய தெளிவை அளிப்பதாகவும் இந்நூல் அமைந்திருக்கிறது. பரிசளிப்பதற்கு ஏற்ற நூல் இது.
நன்றி: தினமணி, 30/7/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000022459.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818