சேய்த் தொண்டர்கள்

சேய்த் தொண்டர்கள், பனையபுரம் அதியமான், வானதி பதிப்பகம், பக்.446, விலை ரூ.350.

ஐந்து வயது வரை பேச்சு வராதிருந்த குமரகுருபரர் முருகன் அருளால் பேசும் ஆற்றல் பெற்று முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் பாடினார். ஒருவரை நாகம் தீண்டினால் அவரைக் காப்பாற்ற மருத்துவரிடம் செல்வது வழக்கம். ஆனால் "சேயூர் முருகன் உலா நூலை எழுதிய சேறைக் கவிராயர் வெண்பா பாடினாலே விஷம் இறங்கிவிடுமாம்.

முருகனடியாராக விளங்கிய செல்லப்பருக்கு தீராத வயிற்று வலி. கோயிலுக்கு வந்த அவர் அங்கேயே உறங்கிவிட, அவர் இருப்பதை அறியாமல் கோயில் கதவுகளைத் தாழிட்டு விட்டனர். கனவில் அவரது தந்தை வடிவில் தோன்றிய முருகப்பெருமான், அவரது வாயில் சிறிது திருநீறை இட்டு அருளினார். அதோடு செல்லப்பரின் வயிற்று வலி நீங்கியது.

இவ்வாறு முருகனடியார்களின் வாழ்வில் முருகப்பெருமானால் நடத்தப்பெற்ற சுவையான பல நிகழ்வுகளையும் முருகனின் பெருமைகளையும் சிறப்பாகச் சொல்கிறது இந்நூல்.

சேய்தொண்டர்கள் எனும் இந்த நூலில் முருகன் அடியார்கள் வரலாற்றை தீஞ்சுவை தமிழில் அழகுபட வடித்திருக்கிறார் ஆசிரியர். அகத்தியர், போகர் என புராண காலம் தொடங்கி, நக்கீரர், ஒளவையார் என சங்ககாலம் நோக்கி நகர்ந்து, சேந்தனார், கச்சியப்ப சிவாச்சாரியார், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், கிருபானந்தவாரியார் என பல முருகன் அடியார்களின் காலம், வாழ்க்கை, ஆன்மிகத் தொண்டு, அவர்கள் பெற்ற முருகனின் பேரருள் ஆகியவற்றை சுவைபட விளக்கியிருப்பது அருமையிலும் அருமை!

நன்றி: தினமணி, 12/3/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *