செலுலாய்ட் சோழன்
செலுலாய்ட் சோழன், சுதாங்கன், அல்லயன்ஸ் கம்பெனி, பக்.648, விலை ரூ.625.
நடிகர் சிவாஜிகணேசனின் தீவிர ரசிகரான நூலாசிரியர் சிவாஜியின் திரையுலகப் பயணத்தையும் வாழ்க்கை அனுபவங்களையும் கலந்து இருநூற்றைம்பது பகுதிகளாக ஒரு நாளேட்டில் எழுதியதன் தொகுப்பே இந்நூல்.
இது சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல. ஆண்டுவாரியான திரைப்பட அனுபவங்களும் இல்லை. ஆனால் சிவாஜி குறித்து இதுவரை அறியப்படாத பல அரிய தகவல்கள் (பெரும்பாலானவை சிவாஜியே நூலாசிரியரிடம் கூறியவை) இத்தொகுப்பில் உள்ளன.
சிவாஜியின் நாடக அனுபவங்கள், திரைப்படத்தில் நடிக்க சிவாஜிக்கு வந்த வாய்ப்பு, படவுலகில் தொடக்க காலத்தில் அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள், கடுமையான உழைப்பால் ஏற்பட்ட படிப்படியான வளர்ச்சி, எம்.ஜி.ஆருடன் அவருக்கிருந்த தனிப்பட்ட நட்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது என்று பல்வேறு செய்திகளை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது இந்நூல்.
சில செய்திகளைப் படிக்கும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. கூண்டுக்கிளி படத்தில் சிவாஜிக்கு டி.எம்.எஸ். பாடிய பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர். தனது மலைக்கள்ளன் பாடத்துக்கு அவரைப் பாட வைத்தது,
திருவிளையாடல் படப்பிடிப்பின்போது தனக்கு வேலை இல்லை என்றாலும் டி.எஸ்.பாலையாவின் நடிப்பைப் பார்ப்பதற்காக படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து சிவாஜி உட்கார்ந்திருந்தது, இருவர் உள்ளம் படத்தில் சரோஜாதேவிக்கு முக்கியத்துவம் உள்ள 30 காட்சிகளில் சிவாஜியை நடிக்காமல் இருக்கும்படி எல்.வி.பிரசாத் கூறியது – இப்படி ஏராளமான தகவல்கள்.
இது சிவாஜியைப் பற்றிய நூல் மட்டும் அல்ல. தமிழ்ப் படவுலகின் ஒரு காலகட்டத்தின் பதிவு.
நன்றி: தினமணி, 24/12/18.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818