செத்தை
செத்தை, வீரபாண்டியன், எழுத்து, பக்.144, விலை ரூ.110.
சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்வையும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.
தனிப்பட்ட தேர்ந்த களங்களை, இதுவரை யாராலும் பதிவுசெய்யப்படாத அடித்தட்டு மக்களை கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மக்களின் அடிமனதின் அடுக்குகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும், அவர்களின் கையறு நிலையையும் காட்சிப்படுத்துகிறது “செத்தை’.
மிக்கி மவுஸ், ரேபிட் போன்று பொம்மை உடைகளை அணிந்துகொண்டு, கொண்டாட்ட நிகழ்வுகளில் விருந்தினர்களை மகிழ்விக்கும் வேலையை பகுதி நேரமாகப் பார்க்கும் கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலையும், பொம்மை ஆடையை அவர்கள் அணிந்துகொள்வதில் ஏற்படும் சிரமங்களையும், அவ்வாடைக்குள் அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் விரிவாக எடுத்துரைக்கிறது “பொம்மையான்’ சிறுகதை. விருந்தினர்களை மகிழ்விக்கும் அந்த இளைஞர்கள் விருந்துண்ண அனுமதிக்கப்படாமல் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
இதுபோன்று, அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளையும், அவர்களுடைய மன வலியையும், அம்மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருப்பது இத்தொகுப்பின் சிறப்பு.
“அடித்தட்டு மக்களுக்கு அடங்கிப் போவதைத் தவிர வழியேதும் இல்லை; யாருக்காவது எப்போதாவது ஏதேனும் ஒருவழியில் சொற்ப அளவில் ஒரு தீர்வு ஏற்பட்டாலும் அது நிரந்தரமாகவோ முழுமையாகவோ இருப்பதில்லை’ என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் படைக்கப்பட்டுள்ளன.
வேலூர் வட்டார வழக்குகளிலேயே கதை மாந்தர்கள் பேசுவதாக அமைந்துள்ளது இத்தொகுப்புக்கு உயிரோட்டமாய் உள்ளது.
நன்றி: தினமணி, 27/9/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818