செவ்வியல் இலக்கியங்கள் பன்முகப் பார்வை
செவ்வியல் இலக்கியங்கள் பன்முகப் பார்வை; தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன்; இணைப் பதிப்பாசிரியர்:ஆ.இரமேஷ்; தொகுதி-1, பக்.520, விலை ரூ.330; தொகுதி-2 பக்.552, விலைரூ.350; தொகுதி-3, பக்.504, விலை ரூ.330; தொகுதி-4, பக்.504, விலை ரூ.320.
சென்னை அரும்பாக்கம், துவாரகதாஸ் கோவர்த்தன்தாஸ் வைணவக் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை மற்றும் தமிழ் இலக்கியத் துறை இணைந்து மார்ச் மாதம் நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள், நான்கு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 290 ஆய்வுக் கட்டுரைகள். அவற்றுள் தெலுங்குக் கட்டுரை ஒன்றும், இந்திக் கட்டுரைகள் இரண்டும், பன்னிரண்டு ஆங்கிலக் கட்டுரைகளும் உள்ளன.
தமிழ்ச் சங்க இலக்கியங்கள் கூறும் அக்கால மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, மரபு, நாகரிகம், சமுதாயம், வழிபாடு, அறம், நீதி, அரசியல், போர், கலைகள், கல்வி, வாணிபம், தொழில்கள், உணவு முறைகள், இயற்கை வளங்கள், குடும்ப உறவுகள், வரலாற்றுப் பதிவுகள், அறிவியல், பொருளாதாரம், சமயம், திருவிழாக்கள், சடங்குகள், மனித உரிமைகள், வேளாண்மை, மேலாண்மைச் சிந்தனைகள் எனப் பலவற்றையும் இத்தொகுப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் எனப் போற்றப்படும் 41 சங்க இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள் இப்பன்னாட்டுக் கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளாக மலர்ந்துள்ளன. தொல்காப்பியம் தொடர்பாக 19; இறையனார் அகப்பொருள் தொடர்பாக 1; சிலப்பதிகாரம் குறித்து 30; மணிமேகலை குறித்து 8; முத்தொள்ளாயிரம் குறித்து 3; பதினெண்கீழ்க்கணக்கு தொடர்பாக 60; பதினெண்மேற்கணக்கு தொடர்பாக 124; பொதுவாக 43 என இதிலுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன.
செவ்வியல் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் செம்மையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. நூல் தொகுதிகள் நான்கிலும் சங்க இலக்கியக் காட்சிகளை ஓவியமாக்கிய டி.என்.ராஜனின் ஓவியங்கள் கண்களில் நுழைந்து மனத்தில் நிறைகின்றன.
நன்றி: தினமணி, 10/4/2017.