சிந்தனை செய் மனமே

சிந்தனை செய் மனமே, மா (டி.எஸ்.பத்மாவதி), மாயா பதிப்பகம்,

குழந்தைகள் இன்று பல்வேறு பிரச்னைகளை எதிர் கொள்கின்றனர். பெற்றோர் பணிக்கு செல்வதால், அவர்களால், குழந்தைகளிடம் முழுமையாக நேரத்தை செலவு செய்ய முடியவில்லை.

தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள், இன்று பெரும்பாலான வீடுகளில் இல்லை. அவர்களிடம் வாழ்க்கை நெறி தொடர்பான கதைகள், சம்பவங்களை கேட்கும் பாக்கியமும், குழந்தைகளுக்கு இல்லாமல் போய்விட்டது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு, வாழ்க்கை நெறி கல்வியைப் போதிப்பது என்பது காணாமல் போய்விட்டது.

இந்த குறையை போக்கும் வகையில், குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளை அவர்கள் வழியிலேயே சென்று, ஆசிரியர் தீர்வு சொல்லியிருப்பது பாராட்டத்தக்கது.

மாயா என்ற கற்பனை ஆசிரியையையும் உருவாக்கி, அவருடன் மந்திரக் கம்பளத்தையும் சேர்த்து, ஆசிரியர் சுவைப்பட, விறுவிறுப்பாக எழுதியிருப்பது மிகவும் சிறப்பு.

தான் கறுப்பாக இருப்பதால் மாணவி ரம்யாவிடம் ஏற்பட்டுள்ள தாழ்வு மனப்பான்மை, தாயே தன்னை அவமானப்படுத்துகிறாளே என அவள் கோபமடைவது, பல வீடுகளில் நடக்கும் ஒரு சம்பவம். அதை ரம்யாவுக்கு புரிய வைத்து, மாயா ஆசிரியை மாற்றுவது சூப்பர்.

பெற்றோர் அடிக்கடி போட்டுக் கொள்ளும் சண்டையால், மாணவர்களின் மன நலன் பாதிக்கப்படுவதை, தீபக் கதாபாத்திரம் மூலம் கூறியுள்ள ஆசிரியர், அதற்கு எளிதாக தீர்வு சொல்லியிருப்பதும் அருமை.

புத்தகத்தை முழுமையாக படித்தபோது, மாயா ஆசிரியை கதாபாத்திரம், நம் நெஞ்சில் நீங்காமல் நிழலாடுகிறது. இந்த புத்தகத்தை, மாணவர்கள் ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும். அதன்பின், கம்ப்யூட்டர், அலைபேசிகளில் விளையாடுவதில், அவர்கள் ஆர்வம் காட்டமாட்டார்கள் என்பது உறுதி!

– ச.சு.,

நன்றி: தினமலர், 5/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *