சிரியாவில் தலைமறைவு நூலகம்
சிரியாவில் தலைமறைவு நூலகம், தெல்ஃபின் மினூய், பிரெஞ்சிலிருந்து தமிழில்: எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.175.
இது ஒரு விநோதமான நூல். வாட்ஸ்அப், ஸ்கைப் ஊடாக சிரியாவில் வசிக்கும் விநோதமான இளைஞர்களுடன் பிரபல பத்திரிகை நிருபர் தெல்ஃபின் மினூய் உரையாடியதன் வழியே பெற்ற தகவல்கள்தான் ‘சிரியாவில் தலைமறைவு நூலகம்’ எனும் புத்தகம்
(எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இந்நூலை பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார்).
ஏன் இவர்கள் விநோதமான இளைஞர்கள் என்றால், அன்றாடப் பாடுகளே கழுத்தை நெருக்கிக்கொண்டிருக்கும்போது, இவர்கள் புத்தகங்களைச் சேகரித்துப் பூமிக்கடியில் நூலகம் அமைக்கிறார்கள். சிரியாவை ரத்தக்காடாக மாற்றும் போரானது விநோதமான வகையில் இவர்களைப் புத்தகங்களின் பக்கம் திரும்ப வைக்கிறது.
சிரியா இளைஞர்கள் வாழும் ஊர் முடக்கப்பட்டிருக்கிறது. நண்பரின் காதுக்குள் அரசை விமர்சித்ததற்காகப் பன்னிரண்டு மாதச் சிறைத் தண்டனை தரும் அளவுக்குக் கெடுபிடி. சிறையில் அடைக்க இடமில்லாமல் ஒட்டுமொத்த நகரத்துக்கும் சீல் வைத்திருக்கும் சூழல். அத்தியாவசியத் தேவையே மறுக்கப்படும் அவலம். பசியால் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு அவ்வூர் ஒரு பிரம்மாண்ட சவப்பெட்டியாக இருக்கிறது.
இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அந்த இளைஞர்கள் வாசிப்பை ஒரு ஆயுதமாகக் கையில் எடுக்கிறார்கள். சுற்றிலும் எல்லாம் அழிந்துபோகும்போது பணிந்துபோகாத ஒரு நகரத்தின் குறியீடாக நூலகத்தைப் படைக்கிறார்கள்.
எல்லாக் கதவுகளும் பூட்டப்பட்டிருக்கும்போது விரித்துவைத்திருக்கும் ஒரு புத்தகம் உலகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. “புத்தகங்கள்தான் நாங்கள் இழந்துவிட்ட காலத்தை மீட்பதற்கும், மடமையை ஒழிப்பதற்குமான ஒரே வழி” என்கிறான் அஹ்மத். அந்த நகரம் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும்போது புத்தகங்கள் அவர்களுக்கு ஆற்றலை அள்ளிக்கொடுக்கின்றன. நகரம் அவர்களை முடக்கிப்போடும்போது புத்தகங்கள் அவர்களை விரிவடையச் செய்கின்றன.
புத்தகங்கள் அவர்களுக்குப் புதிய அரண்களாக இருக்கின்றன; எதிர்ப்பை வெளிப்படுத்தத் துணைநிற்கின்றன. மினூய் சொல்கிறார்: ‘சமாதானத்திலும் சண்டையிலும் அண்டம் தழுவிய நூலக மருத்துவம் என்றொன்று இருக்கிறது போலும்.’
இந்நூலில், அசாதாரண தருணத்தில் நிகழும் புத்தக வாசிப்பைப் பேசுவதோடு போர்ப் பின்னணியும் விவரிக்கப்படுகிறது, அரசின் கோரமான அரசியல் விளையாட்டுகள் விவாதிக்கப்படுகின்றன, இந்தத் தருணத்தில் அந்த இளைஞர்கள் என்னென்ன வாசிக்கிறார்கள் (பாவ்லோ கொயலோவின் ‘ரசவாதி’, இபன் கல்தூனின் ‘அல் முக்காதிமா’, நிஸார் கபானி கவிதைகள், எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’, இபன் காயிம் எழுத்துகள், ஷேக்ஸ்பியர், மொலியேர் நாடகங்கள், முஸ்தாபா காலிஃபேவின் ‘அல் கவாக்கா’, ஸ்டீபன் கவீயின் ‘அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்’ ஆகியவை அந்த இளைஞர்கள் வாசிக்கும் நூல்களில் சில), இந்த நூல்களை வாசிக்க விரும்புவதன் பின் இயங்கும் மனநிலை என்ன என்பதும் பேசப்படுகின்றன, மிக முக்கியமாகப் புத்தகங்களைத் தடைசெய்ய நினைக்கும் அரசு இயந்திரத்தின் நோக்கமும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படுகிறது. அதிக அளவில் கல்வியைப் பரப்பும் ஆயுதங்களாகிய புத்தகங்கள் எதேச்சாதிகாரம் கொண்டவர்களை நடுங்க வைத்து, புத்தக வாசிப்பைத் தடைசெய்யும் எல்லைக்குத் தள்ளுகின்றன.
இந்த இடத்தில், ரே பிராட்பரியின் ‘ஃபாரன்ஹீட் 451’ நாவலை நினைத்துப்பார்க்கும் மினூய் சொல்கிறார்: ‘புத்தகம் அடுத்த வீட்டில் இருக்கும் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கி. அதைக் கொளுத்துவோம். ஆயுதத்தைச் செயலிழக்கச் செய்வோம். மனிதச் சிந்தனையை அடித்துப்போடுவோம். பண்பாட்டுத் தாக்கம் பெற்ற மனிதனின் இலக்கு யாராக இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்?’
மினூயுடன் இளைஞர்கள் உரையாடல் நடத்தும் பல சமயங்களில் பின்னணியில் குண்டுச் சத்தம் கேட்கும் அளவுக்குப் பதற்றமான சூழல்தான் நிலவுகிறது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சில ஆயிரங்களுக்குக் குறைத்துவிடுகிறது எதேச்சாதிகார அரசு. இப்படிப்பட்ட பின்னணியில், தனது வம்சாவளியைத் தக்கவைத்துக்கொள்ள அரசுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் இறங்குவதற்குப் பதிலாக வாசிப்பைத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்களின் மனநிலையை எப்படிப் புரிந்துகொள்வது என்பது இந்நூல் விடுக்கும் முக்கியமான கேள்வி. அதன் வழியாக, வாசிப்பின் வேறு பல சாத்தியங்களையும் திறந்துவிடுகிறது. ஆக, வாசிப்பில் நாட்டமில்லாத ஒருவர் தான் ஏன் வாசிக்க வேண்டும் என்று கேட்டால், இந்தச் சிறு நூலை வாசிக்கத் தரலாம். கூடவே, அவர்களிடம் இன்னொன்றும் சொல்ல வேண்டும்: நாட்டிலுள்ள எல்லோருக்கும் வாசிக்கும் உரிமையை ஒரு அரசு மறுக்குமானால் நம் நிலைமை என்னவாகும் என்று கற்பனை செய்துபாருங்கள்!
– த.ராஜன்.
நன்றி: தமிழ் இந்து, 21/11/2020
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030191_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818