சிவகுமார் எனும் மானுடன்
சிவகுமார் எனும் மானுடன், தொகுப்பு அமுதவன், அல்லயன்ஸ் கம்பெனி, பக். 432, விலை 400ரூ.
நல்லொழுக்கம், நற்பண்புகளுக்கு சினிமாத்துறையில் எடுத்துக்காட்டாக விளங்குபவர் நடிகர் சிவகுமார். கோவை மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இவர், பிழைப்பு தேடி 1950 – களில் சென்னை வந்து, சுமார் 7 ஆண்டுகள் ஓவியம் பயின்று, 40 ஆண்டுகள் திரைப்படங்களிலும், நாடகங்களிலும், சின்னத்திரையிலும் பல வகையான பாத்திரங்களில் பரிணமித்து, கலையுலக மார்க்கண்டேயனாகப் பாராட்டப்படுபவர். அது மட்டுமின்றி புராண, இதிகாசங்களில் தேர்ச்சி பெற்ற பேச்சாளராக, எழுத்தாளராக, தமிழறிஞராக, தன்னை உயர்த்திக் கொண்டு, நல்ல குடும்பத் தலைவராகவும் விளங்குபவர்.
சிவகுமார் கல்வி அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் கடந்த 37 ஆண்டுகளாக ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிகளையும் புரிந்து வருகிறார். இது தவிர, நண்பர்கள், உறவினர்கள், ஆதரவற்றவர்கள்… என்று பலருக்கும் உரிய உதவிகளை மறைமுகமாக வழங்கி, அவர்கள் வளர்ச்சியைக் கண்டு மகிழ்வடைகிறார்.
இதுபோன்ற பல நற்குணங்களைக் கொண்ட இவரைப் பற்றி சக கலைஞர்கள், உறவினர்கள், அறிஞர்கள், நண்பர்கள், மற்ற துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் முதலான பலரும் என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்த நூல் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, கலைஞர், எம்.ஜி.ஆர்., சிவாஜி, கே. பாலசந்தர், சோ, எழுத்தாளர், கி.ராஜநாராயணன், கமலஹாசன், நடிகை மனோரமா, பேராசிரியர் சாலமன் 75க்கும் மேற்பட்டவர்கள் இந்நூலின் நாயகர் சிவகுமாரைப் பற்றி கூறியுள்ள கருத்துக்கள் படிக்கப் பரவசத்தை ஏற்படுத்துவதுடன், இவரைப் போல் வாழவேண்டும் என்ற எண்ணத்தை நம்முள் விதைக்கிறது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 28/9/2016.