சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள், தொகுப்பு சுப்ரபாரதி மணியன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 350, விலை 330ரூ.

அமரர் ஆகிவிட்ட சுகந்தி சுப்ரமணியன் சுப்ரபாரதி மணியனின் இல்லத்தரசி. மனஉளைச்சல்களுக்கு ஆளாகி மரித்துப் போன இவர் ஒரு குறிப்பிடத்தகுந்த கவிதாயினி.

இந்தப் புத்தகம் மூன்று பகுதிகளைக் கொண்டது. 1.சுகந்தியின் கவிதைகள். 2.சுகந்தியின் சிறுகதைகள். 3.சுகந்தியின் டயரிக் குறிப்புகள்… ஆனால், புத்தகத்தின் ஏராளமான பக்கங்களைச் சுகந்தியின் கவிதைகளே ஆக்கிரமித்து இருக்கின்றன…

‘காதல்’ என்றொரு கவிதை!

சாக்கடை அரசியலும்

பெண்ணை உடலோடு தோலுரிக்கவே

பிறந்த சினிமாவும்  – அதன் அற்பத் தனங்களும்

தனி மனித வழிபாட்டை முன் வைக்கும்

சிந்தனைகளும் சமூகக் கோட்பாடுகளான பின்

மனிதர்களுக்குள் சக மனித நேயம்

மறந்தபடி

குரூரமாய் சிதிலமாகிப் போன வாழ்க்கை…

– என நம் சமூகத்தைச் சாடுகிறார்…

ரோஜாக்களைப் பற்றி

பேசியும் புகழ்ந்தும்

அலுத்து விட்டது

தினப்படி வாழ்க்கையில்

முட்களுடனே பரிச்சயம்

அதிகம் என்பதால்.

– என்ற தலைப்பிடாத கவிதை, அவர் தன் வாழ்நாளில் துயர அனுபவங்களை அதிகம் பெற்றவர் என்பதைப் பறை சாற்றுகிறது!

சொந்த வீட்டுக்காக ஏங்கும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை, வீடு!

ஜெயமோகன் சொல்வதைப் போல் – ‘சுகந்தியின் எழுத்தில் துயருற்ற நலிந்த ஓர் ஆத்மாவின் வார்த்தைகள் எளிமையாக பதிவாகி இருக்கும்.’

டயரிக் குறிப்புகளும் அவரது மனப் போராட்டங்களைப் பேசுகின்றன.

– எஸ்.குரு

நன்றி: தினமலர், 12/11/2017.

Leave a Reply

Your email address will not be published.