தமிழ் அச்சுமரபு சார் பதிவுகள்
தமிழ் அச்சுமரபு சார் பதிவுகள் (பதிப்பு, கற்கைநூல், ஆளுமை, ஆவணம் சார்ந்த எட்டுக் கட்டுரைகள்), அ.மோகனா, நெய்தல் பதிப்பகம், பக்.176, விலை ரூ.125.
வெவ்வேறு பொருள் சார்ந்த எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழகத்தில் நிகழ்த்தப்பட்ட விலாச நாடகங்கள் 19-ஆம் நூற்றாண்டில் அச்சு நாடகப் பிரதியாக இன்னொரு பரிமாணத்தைப் பெறுகின்றன.
அப்போது பதிப்பிக்கப்பட்ட நளவிலாசம், சகுந்தலை விலாசம், டம்பாசாரி விலாசம் உள்ளிட்ட பல விலாச நாடகங்களின் சமூகப் பின்னணியை நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். டம்பாசாரி விலாசம் போன்ற நாடகங்கள் தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதாகக் கூறுகிறார்.
தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவே ஆங்கிலேயர் தமிழ்மொழியைக் கற்றுக் கொண்டனர் எனவும், அவர்களுக்கு செய்யுள் வடிவில் உள்ள இலக்கண நூலான நன்னூலைப் புரிந்து கொள்ள சிரமமாக இருந்ததால், வசனநடையில் தமிழ் இலக்கண நூலை எழுதுபவர்களுக்கு பரிசளிப்பதாக விளம்பரம் செய்தனர் எனவும், 1811-இல் திருவேற்காடு சுப்பராய முதலியாரால் முதல் வசன இலக்கண நூல் எழுதப்பட்டு அச்சிடப்பட்டது எனவும் தெரிந்து கொள்ள முடிகிறது.
மெக்கன்சி தொகுப்பில் ‘வம்சாவளிச் சுவடிகள்‘ என்ற கட்டுரையில் அரசர் பெண் கேட்டதால் சாதி இறுக்கம் காரணமாக, புலம்பெயர்ந்து வேறு இடம் சென்ற சில சமூகத்தினரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.
1779-இல் தமிழ் – ஆங்கில அகராதியை வெளியிட்ட பெப்ரீசியின் பணிகளைக் கூறும் கட்டுரை, நீலகேசியைப் பதிப்பித்த சக்ரவர்த்தி நயினார் பற்றிய கட்டுரை, திராவிடவியல் ஆராய்ச்சியாளராக விளங்கிய கமில்சுவலெபில் பற்றிய கட்டுரை, தேவாரப் பதிப்புகள் பற்றிய கட்டுரை, சரஸ்வதி இதழின் பங்களிப்பை ஆராயும் கட்டுரை என இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தையும் படிக்கிறபோது நூலாசிரியரின் கடும் உழைப்பையும், சமூகப் பின்னணியுடன் எந்த விஷயத்தையும் பார்க்கும் அவரின் அறிவியல் கண்ணோட்டத்தையும் தெரிந்து கொள்ள முடிகிறது.
நன்றி: தினமணி, 28/5/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026781.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818