தமிழ் அறிஞர்கள்

தமிழ் அறிஞர்கள், ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.440, விலை ரூ.500.

தமிழின் இன்றைய நிலைக்குக் காரணமான தமிழ்அறிஞர்கள் 36 பேர் தமிழுக்காற்றிய அரும்பணிகளைப் பற்றி விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது .

உ.வே.சாமிநாத அய்யர், அ.ச.ஞானசம்பந்தன், ஒளவை துரைசாமிப் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், தேசிக விநாயகம் பிள்ளை, ஜி.யு.போப், தேவநேயப் பாவாணர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வ.வே.சு.ஐயர், நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உள்ளிட்ட முப்பத்தாறு தமிழறிஞர்களின் வாழ்க்கைச்சம்பவங்கள், அவர்கள் எழுதிய நூல்கள், அவர்களின் கருத்துகள், அவர்கள் பங்கு கொண்ட இயக்கங்கள் என விரிந்து செல்கிறது.

நூலாசிரியர் எழுதிய நீண்ட முன்னுரையில் கட்டுரையில் குறிப்பிடப்படாத பல செய்திகள் உள்ளன. உதாரணமாக வ.வே.சு.ஐயர் சேரன்மாதேவியில் தமிழ்க்குருகுலம், பரத்வாஜ ஆசிரமம் ஆகியவற்றை நடத்தியது பற்றிய தகவல் அவர் குறித்து எழுதப்பட்ட கட்டுரையில் உள்ளது. ஆனால் அங்கே சிலருக்கு தனிப்பந்தி போடப்பட்டதாகவும் அதற்கு அரசியல் தளத்தில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது என்று முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்ப் பணியைத் தவிர அரசியல் உள்பட வேறு எதிலும் ஈடுபடாத உ.வே.சாமிநாதையர் ஈ.வெ.ரா.வை பலமுறை சந்தித்துப் பேசியது, பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் மாணவராக கவிஞர் கண்ணதாசன் இருந்தது, மா.இராசமாணிக்கனாருக்கும், ம.பொ.சி.க்கும் இடையில் தமிழர் திருமணத்தில் தாலி தொடர்பான வாதங்கள் நிகழ்ந்தது, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., ராஜதுரோகக் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து விடுதலையாகும்போது அவரை சிறை வாசலில் வரவேற்க சுப்பிரமணிய சிவாவைத் தவிர வேறு யாருமில்லாமற் போனது என இதுவரை அறியாத பல தகவல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழறிஞர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தின் அடிப்படையிலோ அல்லது அவர்கள் ஆற்றிய பணிகளின் அடிப்படையிலோ கட்டுரைகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

நன்றி: தினமணி, 15/4/19

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789386737472.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *