தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்
தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பூம்புகார் பதிப்பகம், பக். 461, விலைரூ.290.
தமிழ் மொழியின் இலக்கணத்தையும், தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைக்கும் தொல்காப்பியத்தை உள்ளது உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டுமானால், நூலாசிரியர் வாழ்ந்த காலம், இந்நூல் இயற்றப்பட்டதன் நோக்கம், நூலின் அமைப்பு, சமயச்சார்பு முதலியவற்றை அறிந்துகொள்வது அவசியம். இந்நூலின் நோக்கமும் அதுதான்.
இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. முற்பகுதியில் தொல்காப்பியத்தின் தோற்றம், நூலாசிரியரான தொல்காப்பியர் வாழ்ந்த காலம், இந்நூலை இயற்றியதற்கான காரணம் முதலியவற்றை விரித்துரைக்கிறது.
இறையனார் களவியலுரை ஆசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளையும், அவ்வுரைக் கருத்துகள் குறித்து இக்கால ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள பல்வேறு கருத்துகளையும் ஒப்புநோக்கி விளக்குகிறது.
இரண்டாவது பகுதியில், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் தொல்காப்பியர் கூறிய இலக்கண விதிகளை ஒரு நெறிப்பட தொகுத்தும் வகுத்தும் உரைநடையாக்கியிருக்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியத்திற்கு உரையாசிரியர்கள் எழுதியுள்ள உரைவிகற்பங்களையும் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார்.
தொல்காப்பியர் பாணினிக்குக் காலத்தால் பிற்பட்டவர் அல்லர், பாரத காலத்திற்கு முற்பட்டவர் என்பது போன்ற அரிய முடிவுகளும், தொல்காப்பியம் குறித்த பல அரிய தகவல்களும், நுட்பமான விளக்கங்களும், விவாதத்திற்குரிய, ஆய்விற்குரிய பல பகுதிகளையும் கொண்ட இந்நூல் ஒரு மிகச் சிறந்த ஆய்வு நூல்.
நன்றி: தினமணி, 7/8/2017.