தமிழுக்கு ஆஸ்கார்
தமிழுக்கு ஆஸ்கார், வெ.மு.ஷாஜகான் கனி, மீனாட்சி புத்தக நிலையம், பக்.160, விலை ரூ.110.
உலக அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருது, ஆஸ்கார் விருது. 1929 ஆம் ஆண்டு முதல் ஆங்கிலப் படங்களுக்குத்தான் ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டது.
1947 முதல் ஆங்கிலம் அல்லாத அயல்மொழிப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை ஒரு தமிழ் திரைப்படம் கூட , ஓர் இந்திய மொழிப்படம் கூட ஆஸ்கார் விருது பெறவில்லை.
இந்தியப் படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்கவில்லை என்றாலும், ஐந்து இந்தியர்கள் ஆஸ்கார் விருது பெற்றிருக்கின்றனர். ‘காந்தி 39’ படத்துக்கான சிறந்த ஆடை வடிவமைப்புக்காக பானு ஆதையாவுக்கும், திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்ததற்காக சத்யஜித் ரே-க்கும், சிறந்த சவுண்ட் மிக்ஸிங்கிற்காக ரசூல் பூக்குட்டிக்கும், சிறந்த மூல இசை, சிறந்த மூலப் பாடல் என்ற பிரிவுகளில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது குல்ஸாருக்கும் ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஆஸ்கார் விருதின் தோற்றம், இதுவரை ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படங்கள், அவற்றில் சிலவற்றின் கதைச்சுருக்கங்கள், ஆஸ்கார் விருதுக்கான விதிமுறைகள் என ஆஸ்கார் விருது தொடர்பான அனைத்து தகவல்களும் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
திரைப்படக் கலைத்துறைக்கு என்று ஒரு தனி அமைச்சரவையை அரசு ஏற்படுத்த வேண்டும். உலக அளவில் திரைப்பட அறிஞர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும். அதன் மூலம் நமது நாட்டுத் திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் வெளிநாட்டவருக்குக் கிட்டும். அப்போதுதான் நமது நாட்டின் சிறந்த திரைப்படங்கள் அவர்களின் கவனத்தைக் கவர்ந்து ஆஸ்கார் விருது பெற வாய்ப்பு ஏற்படும் என்பது நூலாசிரியரின் கருத்து. சிறந்த நூல்.
நன்றி: தினமணி, 7/8/2017.