தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்
தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் (ஆய்வுக் கட்டுரைகள், இரு தொகுதிகள்), தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன், தமிழ்த்துறை, முதல் தொகுதி-பக்.520; ரூ.500; இரண்டாவது தொகுதி- பக்.496; ரூ.500.
சென்னையில் இரு நாள்கள் நடந்த அனைத்துலக தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட 140 ஆய்வுக் கட்டுரைகள் (தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உட்பட) இவ்விரு தொகுதிகளிலும் உள்ளன.
இறைவன், அரசன், வள்ளல் முதலிய யாரேனும் ஒருவரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கையில் சுருங்கியதாக அமைவது; அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப்பற்றியதாகவும்; அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைக் கூறுவதாகவும் அமைவதுதான் சிற்றிலக்கியத்துக்கான இலக்கண வரையறை.
தூது, உலா, பிள்ளைத்தமிழ், கோவை, குறவஞ்சி, அந்தாதி, பரணி முதலிய 96 வகையான சிற்றிலக்கியங்கள் இவற்றுள் அடங்கும்.மன்னர், மக்கள் வாழ்வியல், சமய, சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுக் கூறுகள், புராணச் செய்திகள் முதலியவற்றை சிற்றிலக்கியங்கள் கூறியதுடன் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் பெரிதும் வித்திட்டன.
இவற்றையெல்லாம் இதிலுள்ள கட்டுரைகள் பிரதிபலிக்கின்றன.தமிழ்விடு தூது, குற்றாலக் குறவஞ்சி, சேக்கிழார் பிள்ளைத்தமிழ், முக்கூடற்பள்ளு என எல்லோரும் அறிந்த (முதன்மையான) சிற்றிலக்கியங்களைச் சுற்றியே இதிலுள்ள கட்டுரைகள் பல உலா வந்திருக்கின்றன.
எந்தவொரு தனிப்பட்ட அரசனையும் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்படாத, சிற்றிலக்கிய இலக்கண எல்லைக்குள் அடங்காத, முத்தொள்ளாயிரம் பற்றி சு.லோகிதா எழுதிய \”முத்தொள்ளாயிரம் காட்டும் சோழனின் தனிச்சிறப்பு' என்ற கட்டுரையும் இதில் இடம் பெற்று உள்ளது.
நன்றி: தினமணி, 24/2/20.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818