தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள், பதிப்பாசிரியர் லேனா தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 512, விலை 320ரூ.

கல்கண்டு வார இதழின் ஆசிரியராக இருந்த தமிழ்வாணன் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு இந்நூல். அரசியல் கேள்விகள், நகைச்சுவை கேள்விகள், பொது கேள்விகள் என மூன்று பிரிவுகளாக கேள்விகள் தொகுக்கப்பட்டு, அதற்கு அவர் அளித்த சுவையான பதில்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

“தி.மு.க.வைச் சமாளிக்க நான் ஒருவனே போதும் என்கிறாரே காமராஜர்?’, “இந்த நாட்டில் நீடித்து நிற்கப்போகிற கட்சி எது?‘’,”தி.மு.க.அழிந்தால் அண்ணா எந்தக் கட்சியில் சேருவார்?’‘, “இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ராஜாஜியிடம் போய் வழி கேட்டிருக்கிறாரே அண்ணாதுரை, இதுபற்றி உங்கள் கருத்து?’‘ இப்படிப்பட்ட சுவையான கேள்விகளுக்கு, மிகச் சுருக்கமாக எளிமையாக தமிழ்வாணன் பதில் சொல்லியிருக்கிறார்.

“நடிகனுக்கும் அரசியல்வாதிக்கும் உள்ள வித்தியாசம் என்ன?‘’ என்ற வாசகர் ஒருவரின் கேள்விக்கு, “நடிகன், பணத்தை வாங்கிக்கொண்டு நடிக்கிறான். அரசியல்வாதி பணம் கிடைக்கும் என்று நடிக்கிறான். எப்படியோ இந்தக் காலத்தில் இந்த இரண்டு பேருக்கும் பணம் கிடைத்துவிடுகிறது‘’ என்று அவர் அன்று கூறிய பதில் இன்றைக்கும் சிந்திக்கத் தக்கது.

அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா, சமூகம், கலாசாரம், உடல் நலம், மருத்துவம் என எந்தத் துறைசார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்கு அவர் தெளிவாக தனது பதில்களைக் கூறியுள்ளார்.

இதில் உள்ள கேள்விகள் எப்போது? எந்தச் சூழ்நிலையில் கேட்கப்பட்டன? என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், கால வரிசைப்படி இந்நூலைத் தொகுத்திருந்தால், கேள்வி – பதிலுக்கான பின்னணியை, அக்கால அரசியல், சமூக நிகழ்வுகளை வாசகர்கள் புரிந்து கொள்ள இந்நூல் உதவியிருக்கும்.அதுமட்டுமல்ல, இந்நூல் ஒரு வரலாற்று ஆவணமாகவும் ஆகியிருக்கும்.

நன்றி: தினமணி, 23/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *