தமிழிலக்கணக் கோட்பாடுகள்
தமிழிலக்கணக் கோட்பாடுகள் (விரிவாக்கப் பதிப்பு), பொன்.கோதண்டராமன் (பொற்கோ), பூம்பொழில் வெளியீடு, பக்.124, விலை ரூ.120.
உலகிலேயே எழுத்து வடிவில் தோன்றிய முதல் இலக்கண நூல் என்கிற சிறப்பு தொல்காப்பியத்துக்கு இருப்பதைப் போலவே, தொல்காப்பியருக்கென்று ஒரு கொள்கையும் இருக்கிறது. அதுதான் தொல்காப்பியரின் இலக்கணக் கொள்கை. “அந்த இலக்கணக் கொள்கையைப் பின்னால் வந்த எந்த இலக்கணக்காரரும் புரிந்து கொண்டதாகத்தெரியவில்லை. தமிழர்கள் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டிய பொருள்தான் தொல்காப்பியர் உணர்த்தும் இலக்கணக் கொள்கை’ என்கிறார் நூலாசிரியர் பொற்கோ. கல்லூரி நிகழ்ச்சிகளில், கருத்தரங்குகளில் பேசிய உரையின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்நூலின் முதல் கட்டுரையான “தொல்காப்பியர் உணர்த்தும் இலக்கணக் கொள்கை’.
தமிழிலக்கணம் – ஒரு வரையறையும் வகைப்பாடும், சார்பெழுத்து, புணரியல், குறிப்புவினை, உரிச்சொல், சொற்பிரிப்பு, சாரியை, பால் பாகுபாடு எனத் தொல்காப்பியக் கோட்பாடுகள் குறித்து மொத்தம் 15 ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. முன்னோர் மொழியைப் பொன்னேபோல போற்றி அவற்றையும் நூலாசிரியர் முன் வைத்திருப்பது சிறப்பு.
ஓர் இலக்கண ஆய்வாளருக்கான வழிமுறைகளை நூலாசிரியர் வரையறுத்துத் தந்திருக்கிறார்: முழுதாக விதிமுறை ஆய்வைப் பின்பற்றுவது, முழுதாக சேர்க்கை முறை ஆய்வைப் பின்பற்றுவது, ஆய்வுச் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான வகையில் இரண்டு முறையினையும் பின்பற்றலாம். இவற்றில் சேர்க்கை முறை ஆய்வுக்கு அடிநிலைக் கிளவிக் கோட்பாடு தேவையில்லை. ஆனால், விதிமுறை ஆய்வுக்கும் இதனை உட்படுத்திய மூன்றாவது முறை ஆய்வுக்கும் அடிநிலைக் கிளவிக் கோட்பாடு மிக இன்றியமையாதது; இந்த அடிநிலைக் கிளவிக் கோட்பாட்டை நன்கு புரிந்து கொண்டு இந்தக் கோட்பாட்டை நன்கு மனத்தில் கொண்டு பார்க்கும்போதுதான் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது’ என்று கூறும் நூலாசிரியர் “அடிநிலைக் கிளவிக் கோட்பாட்டை’ தனியானதொரு கட்டுரையில் விரிவாகவே விளக்கியுள்ளார்.
நன்றி: தினமணி, 13/12/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818