தமிழாய்வு: புதிய கோணங்கள்
தமிழாய்வு: புதிய கோணங்கள், அ.பாண்டுரங்கன், யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.240, விலை ரூ.200.
தமிழாய்வுக்கென்று மரபு வழிப்பட்ட சில நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இந்நூலிலுள்ள கட்டுரைகள், தமிழாய்வைப் புதிய கோணத்தில் பார்த்திருப்பதுடன், தமிழாய்வு குறித்து, மரபுவழிப் பேராசிரியர்கள் உருவாக்கியுள்ள பிம்பங்களை உடைத்திருக்கிறது.
தமிழ் உரைநடை பாடத்திட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியம் பற்றிய சிந்தனைக்கு இடமில்லை. அது லிட்ரரி கிரிட்டிசிஸம் என்ற பெயரில் போதிக்கப்படுகிறது. அதைக் கற்பிக்கும் பேராசிரியர்கள் ஆங்கில நூல்களை அடியொற்றியே இலக்கியத் திறன், இலக்கிய மரபு என்னும் அடிப்படையில் கற்பிப்பதால், இலக்கிய விமரிசனம் ஆழமாகக் கற்பிக்கப்படுவதில்லை. தமிழ் இலக்கியம் முழுவதையும் ஒருங்கிணைத்து, அவை ஒவ்வொன்றும் கால வேறுபாடுகளால் எவ்வாறு தங்களைப் புதுப்பித்துக்கொண்டு வந்துள்ளன என்பதையும் கற்பிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்கிற நூலாசிரியரின் ஆதங்கம் நியாயமானதே.
கணினி யுகத்தில் உடனுக்குடன் செய்தி பரவுகிறது. அப்படிப் பரவும் ஒரு செய்தி கருத்துப் பரிமாற்றத்தில் வெற்றி பெறுகிறது. ஆனால், அச்செய்தி பழந்தமிழ் இலக்கணப்படி அமைவதில்லை. தமிழ் இலக்கியக் கல்வியிலும் நாம் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று தமிழ் இலக்கியக் கல்வி, மொழிபெயர்த்தல் குறித்து "உலக மொழிகளில் எதிர்காலத் தமிழ் எனும் முதல் கட்டுரை எடுத்துரைக்கிறது.
கல்வெட்டுச் சான்றுகளால் அறியப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தத் தொகுப்பு, பாரதியாருக்குப் பிறகு தமிழ்க் கவிதை – ஒரு மதிப்பீடு, நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், பாரதியின் தேசியம் ஒரு வரலாற்றுப் பின்புலம், பாரதியாரும் ஸ்ரீஅரவிந்தரும் ஒப்புநோக்கு, அகிலன் நாவல்களில் நகர்ப்புறமும், கிராமப்புறமும்-ஒரு சித்திரிப்பு முதலிய ஒன்பது கட்டுரைகளும் ஒருமுறைக்கு இருமுறை படித்தறிய வேண்டியவை. தமிழாய்வுக்கும், தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்கும் ஒரு புதிய வாயிலைத் திறந்து வைத்திருக்கிறது இந்நூல்.”,
நன்றி: தினமணி, 15/10/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818