தமிழகம்
தமிழகம் – கி.பி. முதல் நூற்றாண்டு,ந.சி.கந்தையா பிள்ளை, அழகு பதிப்பகம், பக்.25, விலை ரூ.250.
தமிழகம் தொன்மை மிக்க நாடு. இதன் வரலாற்றை பல்வேறு அறிஞர்களும் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ளனர். அவற்றையெல்லாம் ஆய்ந்து, ஏற்புடையனவற்றைத் தொகுத்து அவற்றோடு தனது முடிவுகளையும் இணைத்து நூலாக்கியிருக்கிறார் ஆசிரியர்.
அற்றை நாளில் தமிழ்நாட்டின் எல்லைகள், தமிழ்நாட்டில் பயின்ற மொழிகள், பின்னர் தமிழினின்றும் கிளைத்த வழிமொழிகள், தமிழில் முத்தமிழ் வளர்ந்த விதம், தமிழர் நாகரிகம், நம்பிக்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றையும், தமிழர், ஓவியம், சிற்பம், வணிகம், சோதிடம், வானவியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்கினர் என்பதை யும், தமிழர்களின் போர்முறை, திருமண முறை ஆகியவையும் நிரல்படத் தொகுத்துத்தந்துள்ளார் நூலாசிரியர்.
குறிப்பாக, சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த புலவர்கள் குறித்து விரிவாகக் கூறியுள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியத்துக்கு, எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலியோர் உரைகளே காணப்படுகின்றன. இடையிட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு தொல்காப்பியம் உரையின்றி இருத்தல் கூடுமோ என்கிற பொருள் பொதிந்த வினாவை எழுப்புகிறார் நூலாசிரியர்.
புறநானூற்றுப் பெண் புலவர்களான மாசாத்தியார், பொன்முடியார், ஒளவையார் போன்றோரது பாடல்களைக் குறிப்பிட்டு அக்காலத்திலேயே பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கியமையை நிறுவுகிறார்.
அரசனைத் தெரிவு செய்யும்முறை, துறவிகள் தோற்றம், கிராமச் சங்கம், பழைய மணமுறை, பரத்தையர் – இவை குறித்தும் தனித்தனியே விளக்கியுள்ளார்.
பண்டையத் தமிழகத்தின் நிலவியலையும் வாழ்வியலையும் தக்க தரவுகளோடு சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
நன்றி: தினமணி, 4/10/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818