தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை

தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை, ஜெ.ஜெயரஞ்சன், மின்னம்பலம் வெளியீடு, விலை: ரூ.180.

காவிரிப் படுகையில் நில உடைமையாளர்களின் ஆதிக்கம் எவ்வாறு தகர்ந்தது என்பதைப் பற்றிய பொருளாதார அறிஞர் ஜெ.ஜெயரஞ்சனின் ஆழமான ஆய்வுப் புத்தகம்தான் ‘தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த கதை’. தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமான உணவுத் தேவையில் காவிரிப் படுகையின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம். காவிரிப் படுகையின் உணவு உற்பத்தியில் காலங்காலமாக நமக்காக உழைத்துக்கொண்டிருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் நிலையையும், நிலமற்ற விவசாயிகளின் குத்தகை முறைகளையும், இவர்கள் மீதான நிலப்பிரபுக்களின் உழைப்புச் சுரண்டலையும் பற்றிய ஆழமான புரிதலைத் தருகிறது இந்நூல்.


நியாயமற்ற கூலி, முறையற்ற நில வாடகை, சுரண்டப்பட்ட உழைப்பு இவற்றின் விளைவுகளும், அரசியல் சமூகத் தளங்களில் நடந்த தவிர்க்க இயலா வரலாற்று மாற்றங்களும் காவிரிப் படுகையில் எவ்வாறு நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தியது என்பதையும் இந்நுால் முழுமையாக விளக்குகிறது. காலனியாதிக்கக் காலத்திலிருந்தே இந்தச் சுரண்டல் முறைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாகத் தொடங்கின. அந்தப் போராட்டங்களின் போக்கு இடதுசாரிகளின் அரசியல் பங்களிப்பின் வாயிலாக முறைப்படுத்தப்பட்டுத் தீவிரமடைந்தது. பிறகு, தமிழகத்தை ஆளத் தொடங்கிய திராவிடக் கட்சிகள் இயற்றிய நிலச்சீர்திருத்தச் சட்டங்களின் வாயிலாகக் காவிரிப் படுகையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவையெல்லாம் அடிப்படைப் பிரச்சினைகளான கூலி உயர்வு, நில வாடகையில் ஏற்பட்ட சில மாற்றங்கள், நிலமற்றவர்களுக்குக் கொஞ்சம் நிலம் என்பன போன்ற சீர்திருத்த நடவடிக்கையாக மட்டுமே சுருங்கிய வடிவில் பார்க்கப்பட்டது.

நிலப்பிரபுத்துவம் என்ற பெரும் சமூக அவலத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்க்கவில்லை என்றே இதுவரை பேசப்பட்டுவந்தது. இந்நிலையில், நிலப்பிரபுத்துவத்தின் தன்மைகள் சிதைவுற்று, குத்தகைதாரர்களின் கைகளுக்கு நிலங்கள் மாற்றப்பட்டிருக்கும் இன்றைய யதார்த்தத்தை உள்வாங்கி, இரண்டுக்குமான இடைவெளியைத் தன் ஆய்வுப் பொருளாகக் கொண்டு விரிவான பார்வையை முன்வைத்துள்ளார் ஜெயரஞ்சன். பன்மைத்துவம் கொண்ட சிக்கலான நம் சமூகத்தையும், அதனுள் செயல்படும் அரசியலையும் மிகக் கூர்மையாக அலசும் இந்நூல், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் முக்கியமான வரலாற்று ஆவணம் எனலாம். நாம் கடந்துவந்த பாதையை அறிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையும்கூட.

நன்றி: தமிழ் இந்து, 14.03.2020.


இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *