தண்டோராக்காரர்கள்
தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} , சு. தியடோர் பாஸ்கரன், தமிழில் அ.மங்கை, அகநி வெளியீடு, விலை 220ரூ.
தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க. சினிமா குறித்ததாகட்டும், இயற்கை குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு புத்தகத்திற்கு செய்யும் ஆய்வுகள், எடுக்கும் தரவுகள் என எல்லாம் அந்த புத்தகத்திற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவை. The message bearers என்ற பெயரில் 1981 காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் 35 வருடங்களுக்கு பின் தமிழ் வாசகர்களுக்கு அகநி பதிப்பகத்தின் நல்ல வடிவமைப்பில் வந்திருக்கிறது.
வெகு சுவாரசியமான பல்வேறு தகவல்கள் நூல் முழுக்க. “வெள்ளை வெள்ளை கொக்குகளா” என நாடக மேடையில் பாடி கே.பி. ஜானகியம்மாள் வெள்ளையர்களை வெரூட்டியதும், தியாக பூமி என்னும் திரைப்படம் வெள்ளையர்களால் தடை செய்யப்பட்டதுமே எனக்கு நினைவில் வரக்கூடிய சுதந்திரத்திற்கு முன்னான நாடக திரை தகவல்கள். ஆனால் இப்புத்தகம் படித்து முடித்த பின் எவ்வளவு கலாச்சார பண்பாட்டு தலையீடுகள் நாடகங்கள், மௌனப் படங்கள், திரைப்படங்கள் வழியாக தமிழக சென்னை ராஜதானி மக்களை இந்த காலக்கட்டத்தில் ஆட்கொண்டு இருக்கிறது என மலைப்பாக இருக்கின்றது.
முன்னது மேடை நாடகம், அதனைத் தொடர்ந்து மௌன படங்கள், பின்னாக பேசும் முழுநீள படங்கள், இறுதியாக விடுதலைகால படங்கள் என நான்கு பகுதிகளாக நூல் பிரிந்துள்ளது. ஒவ்வொரு பகுதி முடிவிலும் குறைந்தது 3 பக்கங்களுக்கு மிகாமல் தரவுகள். அதில் ஆசிரியரது உழைப்பு தெரிகிறது. அ. மங்கையின் மொழிபெயர்ப்பு சிறப்பித்து சொல்ல வேண்டியது. எளிய வாக்கியங்களில் எளிதான வார்த்தை பிரயோகங்களில் செய்தியை வாசகர்களுக்கு கடத்துவதில் சிரமம் ஏதுமில்லை. தண்டோராக்காரர்கள் என்னும் பெயரும் வெகு பொருத்தம்.
நன்றி:கூடம்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818