தாவோ தே ஜிங்
தாவோ தே ஜிங், தாவோயிசத்தின் அடித்தளம், லாவோ ட்சு, சாரமும் விசாரமும், சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், பக்.240, விலை ரூ.200.
கி.மு.551 முதல் கி.மு.479 சீனாவில் வாழ்ந்தவர் லாவோ ட்சு. அவர் எழுதிய வாழ்வியல் நூல் இது. செய்யும் செயலில் லயித்து தன்னைத் தானே மறக்க வேண்டும். செய்பவனும் செயலும் ஒன்று கூடும் போது செய்யும் செயலுக்கான பலனை எதிர்பார்க்காத தன்மை வந்துவிடுகிறது. அதை தாவோயிசம் வலியுறுத்துகிறது. தாவோயிசத்துக்கு எந்தவிதக் கோட்பாடு அடிப்படையுமில்லை. எதிலும் பற்று வைக்க வேண்டியதில்லை.
எதிரானவற்றின் கூட்டுச்சேர்க்கைதான் உலக இயக்கம். ஒன்றை ஏற்று ஒன்றை விலக்குவது தாவோவின் வழி அல்ல. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ வேண்டும். எதிர்காலக் கனவுகளில் மிதக்காமல் இக்கணத்தில் கவனம் செலுத்த வேண்டும். நாளை நம் கையில் இல்லை. எல்லாம் அதனதன் போக்கில் இயங்கட்டும்.
ஆசையில்லாத போது எல்லாம் அமைதியுறும். நீ விரும்பியதை வாழ்க்கை அளிக்காது. அது எதை அளிக்கிறதோ அதைச் சலனமின்றி ஏற்றுக் கொள். வருங்காலத்தை வசப்படுத்த முடியாது. இவைதாம் தாவோயிசத்தின் வழிகாட்டல்கள். ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்பு அக்காலச் சூழ்நிலைகளிலிருந்து உதித்த லாவோ ட்சு -வின் கருத்துகளை, இக்காலத்தில் ஒருவர் ஏற்றுக் கொண்டால், மாற்றத்துக்கான எந்தவித முயற்சிகளிலும் ஈடுபடாமல், எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்தக் கொள்கையும் இல்லாமல், எந்தவித இலக்குமில்லாத செயல்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு, “தான், தன் மனது என்று “தனக்குள்ளேயே சுருங்கிப் போகக் கூடிய நிலை ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு. தனிமனிதனை மையமாகக் கொண்ட இந்தச் சிந்தனைமுறை, இக்காலத்துக்கு எந்த அளவுக்குப் பொருந்தும் என்ற ஐயம் எழுகிறது.
நன்றி: தமிழ் இந்து
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818