தாயுமானவ சுவாமிகள் பாடல் – அரிய பழைய உரை

தாயுமானவ சுவாமிகள் பாடல் – அரிய பழைய உரை, சு. இலம்போதரன், முல்லை நிலையம், பக். 656, விலை 450ரூ.

வேதாந்த – சித்தாந்த நெறி நின்ற தாயுமானவரின், 1,451 பாடல்களுக்குப் பலர் எழுதிய உரைத் தொகுப்போடு, செய்குதம்பி பாவலரின் கைவண்ணமும் கலந்து வெளிவந்துள்ள இவ்வரிய உரை தனித்தன்மை வாய்ந்தது. காலத்தால் பிற்பட்டவர் எனினும் அத்வைத நெறியை, தனது செழுமைச் சிந்தனைகளால் வெளிப்படுத்திய மகான்.

உரைச் சிறப்பிற்கு ஒரு சில உதாரணங்கள்: ‘அங்கிங்கெனாதபடி’ என்ற முதல்பாடலில், ‘மனவாக்கனிற் தட்டாமல் நின்றதெது’ என்னும் அடிக்கு, (பக்.100) சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற நால்வகை வாக்கு விளக்கம் மற்றும் அப்பாடல் அடிகளுக்கு, காஞ்சிப் புராணம், திருவிளையாடற் புராணங்களில் இருந்து மேற்கோள்கள் தெளிவைத் தருகின்றன.

எழுவகைத் தோற்றம், 84 லட்சம் யோனிபேதம், விரிவாய பூதங்கள் இவற்றை தேவாரம், சிவஞானபோதம், உண்மை விளக்கம், போற்றிப் பஃறொடை (பக்.23) ஆகியவற்றோடு ஒப்பிட்டு உரை தந்துள்ளமை சிறப்பு. இதைப் படிக்கும் சைவநெறிச் செல்வர்கள் நிச்சயம் மகிழ்வர்.

‘அறிஞருரை’ (பக்.590) என்னும் தலைப்பில் உள்ள, 14 கண்ணிகளிலும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ள மேற்கோள்கள் குறிப்பில் கண்டபடி, புத்தகத்தில் இணைக்கப்படவில்லை. அதைச் சேர்த்திருந்தால், தாயுமானவர் பாடல் சிறப்பு அதிகம் மக்களுக்கு போய்ச் சேர உதவியிருக்கும்.

-பின்னலூரான்.

நன்றி: தினமலர், 21/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *