தி ஜேர்னி ஆப் ஜீனியர்ஸ்

தி ஜேர்னி ஆப் ஜீனியர்ஸ், இரா. சிவராமன், பை கணித மன்றம் வெளியீடு, விலை 250ரூ.

கணித பாடங்கள் சொல்லிக் கொடுக்கும் கணித சிந்தனைகள் எல்லாம், நம் அன்றாட வாழ்வில் எங்கே பயன்படுகின்றன என்ற கேள்விக்கான விடை தான், The journey of genius என்ற ஆங்கில நூல். இதன் முக்கிய அம்சமே கதை வடிவில் கணித சிந்தனைகளை அறிமுகப்படுத்தியிருப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.

கணிதத்தின் அனைத்து அம்சங்களையும் அறிந்த அதுல்யா என்ற மேதையும், கணிதம் பற்றி பெரிதாக புரிதல் இல்லாத வியாபாரி ஒருவரும் சந்திக்க நேர்கிறது. இருவரும் மேற்கொள்ளும் பயணத்தில் பலதரப்பட்ட மக்களை சந்திக்கின்றனர். அந்த மக்களின் வாழ்க்கை சம்பவங்கள், சந்திக்கும் பிரச்னைகளை கணித அடிப்படையில் அணுகுகிறது அதுல்யா கதாபாத்திரம்.

நூலில் மொத்தம், 22 அத்தியாயங்கள். ஒவ்வொன்றும் கணிதத்தின் பல்வேறு பிரிவுகளை, பரிணாமங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

எந்த வடிவத்தில் வேலி அமைத்தால், வசிப்பதற்கான இடம் அதிகமாக இருக்கும் என்ற கிராம மக்களின் கேள்வி வாயிலாக வட்டத்தின் பண்புகளை ஆழமாக விளக்குகிறார் ஆசிரியர்.

புகைப்படத்தில் தென்படும் விமானம், புகைப்படம் எடுக்கப்பட்ட அந்தக் கணத்தில் எவ்வளவு உயரத்தில் பறந்தது என்ற ஒரு குழந்தையின் கேள்வி, வடிவொத்த முக்கோணங்களைப் பற்றிய விளக்கத்தை தருகிறது.

குமிழ்களை உருவாக்கும் ஊதுகுழல் வட்ட வடிவத்தில் இருப்பதால்தான், குமிழ்கள் கோள வடிவில் உருவாகின்றனவா? இந்த உரையாடல், கோள வடிவத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துகிறது.

மரத்தின் உச்சிக்கு செல்லாமல், தூரத்தில் இருந்து அதன் உயரத்தை அளக்கும் முறைகள், எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாமல் நதியின் அகலத்தை அளவிடும் முறைகளைப் பற்றிய விளக்கங்கள் முக்கோணவியலின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
ரயில் பயணத்தின்போது நாம் அதிகம் வெறுக்கும் ஒரு அம்சம்,

ரயிலின் உலுக்கும் அதிர்வுகள். இப்படிப்பட்ட அதிர்வுகள் ஒரு நிமிடத்தில் எத்தனை முறை நிகழ்கின்றன என்பதைக் கணக்கிட்டால், ரயில் எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது என்பதை கண்டறிய முடியும் என்ற தகவல், இதில்கூட கணிதம் அடங்கியுள்ளதா என்ற வியப்பை ஏற்படுத்துவதுடன், கணிதத்தை வெறும் எண்களின் குவியலாகவும், மனதில் பதியவே பதியாத சூத்திரங்களின் தொகுப்பாகவும் பார்க்கும் மனநிலையை மாற்றுகிறது.

கட்டுமானம், பொறியியல் தொழில்நுட்ப துறைகள், வணிகம், குற்றவியல், கலைகள் எனப் பல்வேறு துறைகளில் கணிதம் எவ்வாறு பயன்படுகிறது என்பதை இந்த நூல் விவரிக்கிறது.

நூலைப் படித்த பிறகு, நம் அன்றாட வாழ்விலும், இயற்கையிலும் கலந்திருக்கும் கணிதம் நேசிக்கப்பட வேண்டியது என்பதை உணர முடியும். கணிதம் சார்ந்து நமக்கு இருக்கும் சந்தேகங்களுக்கெல்லாம் சளைக்காமல், அதே சமயம் சுவாரஸ்யமாக பதில் அளிக்கும் ஆசிரியர் சிவராமன் இளைஞர்களை நிச்சயம் தன் முயற்சியால் ஈர்ப்பார்.

நன்றி: தினமலர், 4/12/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *