தேசியமும் திராவிடமும்
தேசியமும் திராவிடமும், துரை கருணா, எம்.ஜி.ஆர். பாசறை, பக் – 200, விலை ரூ. 300.
தேசியமும் திராவிடமும் – என்ற இந்த நூலில் பெரும் பகுதி திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, ஆட்சி, அதிகாரம் குறித்து எழுதப்பட்டுள்ளது.
மொத்தமாக 39 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். தேசியம் என்று வரும் போது, காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆரம்ப கால சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி, வாஞ்சிநாதன் வரலாற்றுச் சம்பவங்களுடன் தொடங்குகிறது. “வாஞ்சியின் தீவிரவாதச் செயலும் அவரது உயிரிழப்பும் தனக்கு உவப்பிலை’ என்று வ.உ.சி.யின் அறிக்கையை எடுத்துக்காட்டி சுதந்திரப் போராட்டத்தின் இரு வித போக்குகளைப் பதிவிட்டுள்ளார் நூலாசிரியர் துரை கருணா.
காங்கிரஸ் பேரியக்கத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி பெரும்பாலான மாகாணங்களின் ஆட்சியில் இருந்த கட்சி, பின்னாளில் அடைந்த பின்னடைவும், தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்கிற அமைப்பு நீதிக் கட்சியாக, திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக உருப்பெற்று இன்று வரை மாறி மாறி ஆட்சியில் இருப்பது எனப் பல்வேறு சுவையான சம்பவங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக – அதிமுக அமைப்புகளுடன் முரண்பட்ட காங்கிரஸ், அதே கட்சிகளுடன் வெவ்வேறு கால கட்டங்களில் கூட்டணி அமைத்ததும் கூட விவரிக்கப்பட்டிருக்கின்றன.
கம்யூனிஸ்ட் கட்சியில் இடது – வலது என உருவானது போன்று காங்கிரஸிலும் பிளவு ஏற்பட்டது குறித்த சம்பவங்களுடன் சொல்லப்பட்டுள்ளன.
சுவாரசியமான திருப்பங்களாக ராஜாஜி – பெரியார் திருவண்ணாமலை சந்திப்பு, பெரியார் மணியம்மை திருமணம், அண்ணா – பெரியார் மோதல் நிகழ்வுகள் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள உதவும் சம்பவங்களாகும்.
40 ஆண்டு கால பத்திரிகையாளர் பெற்ற அனுபவங்கள் இந்நூல் எழுத பெரிதும் துணை புரிந்துள்ளன. சுவையான ஆவண நூல்.
நன்றி: தினமணி, 11/4/22.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818