திருக்குறள் உரைக்கதைகள்
திருக்குறள் உரைக்கதைகள், பானு மாதவன், மணிமேகலைப் பிரசுரம், பக்.256, விலை ரூ.175.
திருக்குறளின் அறத்துப்பாலில் நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்களில் உள்ள 20 குறள் பாக்களுக்கு விளக்கம்அளிக்கும்விதமாக எழுதப்பட்ட 20 சிறுகதைகளின் தொகுப்பு.
இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள், ஒரு குறிப்பிட்ட குறளின் கருத்தை விளக்க வேண்டும் என்ற அடிப்படையில், சிறந்த கற்பனைத்திறனுடன் சுவையாக எழுதப்பட்டுள்ளன.
திருடர்கள் அரண்மனையில் திருடியவற்றை சிவனடியாருக்குத் தெரியாமல் அவர் வசிப்பிடத்தில் வைத்துச் செல்ல, சிவனடியார் திருடனாகக் கருதப்படுகிறார். எனினும் கதையின் இறுதியில் அவர் குற்றமற்றவர் என்பது தெரிய வருகிறது.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு என்ற குறளை விளக்கவே இந்தக் கதை. சாதி வெறிபிடித்த ஜமீன்தார் மீது செருப்புத் தைக்கும் ஒருவரின் மகனான சிறுவனின் பந்து பட்டுவிடுகிறது. அதற்காக அந்தச் சிறுவனை அடிக்கிறார் ஜமீன்தார். ஊரைவிட்டுச் சென்ற சிறுவன், ஒருவரால் தத்தெடுக்கப்பட்டு, வளர்ந்தபின், கலெக்டராகி அதே ஊருக்கு நீண்ட காலம் கழித்துத் திரும்பி வருகிறான். சிறுவனை அடித்து விரட்டுகிறார் ஒருவர்; அதே சிறுவனைக் கலெக்டராக்குகிறார் இன்னொருவர்.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார் என்ற குறளை விளக்கவே இந்த சபாஷ் மாப்பிள்ளை சிறுகதை.
கருப்புப் பணத்தால் நல்லதும் செய்யலாம்; தீமையும் செய்யலாம் என்று கூறும் கருப்புப் பணம் சிறுகதை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் சுற்றியுள்ள மனிதர்களுக்குப் பலவிதங்களிலும் உதவியாக இருக்கலாம் என்று கூறும் எங்கேயும் எப்போதும் சிறுகதை, எண்ணெய் வணிகம் செய்து அதிகப் பொருளீட்டிய ஒருவர் தொலைதூரப் பேருந்து நிறுத்தங்களில் சேவை நோக்கத்தோடு உணவகங்களைத் திறந்து புகழீட்டுவதைச் சொல்லும் என் மகன் சிறுகதை என இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள அனைத்துச் சிறுகதைகளும் அருமை.
நன்றி: தினமணி, 26/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818