திருக்கோயில்கள் – தேவாரத் திருமுறைகள் கண்ட திருத்தலங்கள்

திருக்கோயில்கள் – தேவாரத் திருமுறைகள் கண்ட திருத்தலங்கள் (மூர்த்தி, தலம், தீர்த்தம்), உரையாசிரியர்: அ.ஜம்புலிங்கம், இந்துமதி பதிப்பகம், பக்.528, விலை ரூ.500.

சைவ சமயக் குரவர்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய மூவரும் பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள இறைவன் மீது பக்திப் பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம்எனவும், அவர்களால் பாடப் பெற்ற ஊர்கள்பாடல் பெற்ற தலங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

இந்நூலில் ஒவ்வொரு தலத்தின் இயற்பெயர், அதற்கு தற்போது வழங்கப்படும் பெயர், அவ்வூரின் அமைவிடம், அங்குள்ள இறைவன், இறைவியின் பெயர்கள், அந்தத் தலத்தின் சிறப்புகள், கோயிலின் தல விருட்சம், தீர்த்தம், அவ்வூரில் அவதரித்த அருளாளர்கள், அங்கு வந்து வழிபட்டு பேறுபெற்றோர் என பல செய்திகளும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

ஆசிரியர் தனது முன்னுரையிலேயே பாடல் பெற்ற தலங்களை ஒவ்வொரு மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலுமுள்ள அதிகச் சிறப்பு வாய்ந்த கோயில்கள் குறித்த செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், நூலின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொருளடக்கத்தில், பாடல் பெற்ற ஊர்களில் பெயர்களை மட்டும் வரிசையாகப் பட்டியலிடாமல், ஒரு தலத்தின் பெயரையடுத்து அத்தலத்தின் அருகில் அமைந்துள்ள தலங்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பது, அவ்வூர்களுக்குச் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும்.

சைவர்களால் கோயில்என்று குறிப்பிடப்படும் சிதம்பரத்தில் தொடங்கி ஒவ்வொரு தலத்திலும் தேவார ஆசிரியர்கள் பாடிய பாடல்களை (இரண்டு முதல் ஐந்து வரை) குறிப்பிட்டிருப்பது சிறப்பு.

பதிகத்தின் முதல் பாடல் அல்லது இறுதிப் பாடல் என்று எந்த முறையையும் பின்பற்றாமல் நூலாசிரியர் தனக்குப் பிடித்த பாடல்களைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆயினும் திருநாவுக்கரசரின் முதல் பாடலானகூற்றாயின வாறு பாடலும் (திருவதிகை) ஒருவனையும் அல்லாது (திருப்புகலூர்) பாடலும் இடம் பெறாதது சற்று ஏமாற்றமே.
பாடல் பெற்ற தலங்களைப் பற்றி அறிய விரும்புவோரிடம் மட்டுமல்ல, சைவத்திலும் தமிழிலும் ஈடுபாடுடைய அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல்.”,

நன்றி: தினமணி, 5/11/2018.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

 

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *