திருக்குறள் விளக்கம்

திருக்குறள் விளக்கம், திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும், கி.குப்புசாமி முதலியார், சிவலாயம் வெளியீடு, பக்.1735, விலை 1800ரூ.

உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறளுக்கு, எண்ணற்ற விளக்கவுரைகள் வெளிவந்துள்ளன; இனியும் வரும். அவை அத்தனையும், மாற்றுக் குறையாத பரிமேலழகரின் உரைக்கு அடுத்த விளக்கமாகும்.

பரிமேலழகர், வைணவராக இருந்தாலும், சைவ நுால்களை நன்கு பயின்று தேர்ந்தவர்.
வட மொழியைக் கற்று கரை தேர்ந்த வித்தகர்.

திருக்குறளுக்கு அவரின் உரை, மாபெரும் கோவிலுக்கு தங்கக் கூரை வேய்ந்ததை போன்றது என்றாலும், அவரின் உரையும், விமர்சனங்களை சந்தித்தே வருகிறது. இது, தமிழின் சிறப்புகளில் ஒரு பகுதியாகும்.

திருக்குறளும், பரிமேலழகரின் உரையும், மக்களுக்கு எளிதில் புரியாவண்ணம் இருந்தது என்பதைப் பார்க்கும் போது, இன்றைய தமிழ் சற்று கரைந்திருக்கிறதோ என்று கருத்து வந்தால் தவறில்லை.

தொடர்ந்து அன்னிய ஆட்சிகள், தமிழ்ச் சங்கம் போன்ற ஆய்வரங்க அமைப்புகள் நசிந்தது காரணம். பரிமேலழகர் உரைக்கு சிறப்பு சேர்த்து அதை எளிமையாக்கியவர், சித்தாந்த பேராசிரியர் கி.குப்புசாமி முதலியார்.

கடந்த, 1924ல், அறத்துப்பாலும், அதன் தொகுப்புரையும் வெளிவந்தது. 1926ல், பொருட்பாலும், காமத்துப்பாலும் அவரால் வெளியிடப்பட்டது. இந்நுால் தற்போது, மீண்டும், 94 ஆண்டுகளுக்கு பின் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகம் மீண்டும் நம் கைகளில் தவழ்வது பெருமகிழ்ச்சியைத் தருகிறது.

திருக்குறளுக்கு, பரிமேலழகர் தந்த உரையின் நுண்பொருள்களில் ஏற்படும் மயக்க சூழ்நிலைக்கு, அம்மயக்கங்களை நீக்கி, அடுத்தடுத்த குறள், அதற்கடுத்த அதிகாரம் என்ற கருத்துக்களை ஆசிரியர் தொகுத்த விதத்தை, கம்பவாரிதி ஜெயராஜ் முன்னுரை பகுதியில் சுட்டிக் காட்டியது, இந்த நுால் குறித்த தெளிவைக் காட்டுவதாகும்.

திருக்குறள் அறத்துப்பாலில், ஒவ்வொரு அதிகாரத்திற்கும், இந்நுாலின் இறுதியில் தொகுப்புரை வழங்கப்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்து, சிறந்த ஆங்கிலத்திலும் தொகுப்புரை வழங்கப்பட்டிருப்பது, மேலும் சிறப்பு சேர்க்கிறது.

அதிலும் கடவுள் வாழ்த்து அதிகாரச் சுருக்கத்தில், ‘Tiruvalluvar has declared at length the arguement, to believe and worship the One god, with no room for doubt’ என்று குறிப்பிட்டிருப்பது, உலக அறிஞர்கள் திருக்குறளை அறிய ஏற்படுத்திய நல்முயற்சி என்பதையும் உணர முடிகிறது. நுாலகங்களில் இருக்க வேண்டிய நல்ல நுால்.

–சி.கலாதம்பி

நன்றி:தினமலர், 20/5/2018.

 

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *