திருமூலர் அருளிய திருமந்திர விளக்கம்

திருமூலர் அருளிய திருமந்திர விளக்கம், ம.கணபதி, மணிவாசகர் பதிப்பகம், பக்.232, விலை ரூ.300.

தேவாரம், திருவாசகத்தை விரும்பிப் படிக்கும் பலரும் திருமந்திரத்தைப் படிப்பதில்லை. ஏனெனில் அதன் பொருள் எளிதில் விளங்காது என்று அவர்கள் கருதுவதாலேயே.

அவர்கள் அவ்வாறு கருதுவது ஒருவகையில் சரியானதே. பெரும்பாலான திருமந்திர உரைகள் கற்பதற்கு கடினமாகவே உள்ளன. அக்குறையைப் போக்கியிருக்கிறது இந்நூல்.

மூவாயிரம் பாடல்கள் அடங்கிய திருமந்திரத்தின் (மூலம் உரைசெய்த மூவாயிரம் தமிழ்) ஒன்பது உட்பிரிவுகளிலிருந்தும் (தந்திரங்கள்) முக்கியமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு எளிய நடையில் உரையும் வழங்கியுள்ளார் இந்நூலாசிரியர்.

உயரிய கருத்துகளை எளிய வடிவில் கூறுதல் என்பது திருமந்திரத்திலிருந்தே தொடங்கியது எனலாம். திருமந்திரத்தின் ஒன்பது தந்திரங்களிலும் ஒன்பது ஆகமங்களின் கருத்துகளையே திருமூலர் கூறியுள்ளார்.

நூலாசிரியர் திருமூலரின் கருத்துகளை விளக்குமிடத்து மேற்கோள்களாக திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமானவர், ஒளவையார், உமாபதி சிவம் போன்ற சான்றோர்களின் கருத்துகளையும் இணைத்திருப்பது சைவ சமயம் குறித்த பார்வையை உருவாக்குகிறது.

“அன்பே சிவம்’, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்’, “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’, “என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே’ என்பன போன்ற திருமூலரின் வாய்ச்சொற்களும் இன்னும் புதியனவாக இருப்பதை இந்நூல் தரவுகளோடு மெய்ப்பிக்கிறது.

திருமூலரின் வரலாற்றை சுருக்கமாகக் கூறியிருப்பதும், பின்னிணைப்பாக மனப்பாடம் செய்யத்தக்க பதினைந்து திருமந்திரப் பாடல்களைப் பட்டியலிட்டிருப்பதும் மாணவர்களுக்குப் பயன்படும். அரிய நூலுக்கு எழுதப்பட்ட எளிய உரை இந்நூல்.


நன்றி: தினமணி, 25/8/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%82%e0%ae%b2%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a8%e0%af%8d/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *