திருப்புகழ்
திருப்புகழ், உரை: வ.சு.செங்கல்வராய பிள்ளை, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை ரூ.2500 (மூன்று தொகுதிகளும் சேர்த்து)
முருகவேள் திருமுறை
அருணகிரிநாதரின் திருப்புகழ், தமிழிசையின் பெருஞ்சொத்து. அருணகிரிநாதர் பாடியது 16,000 பாடல்கள் என்று கூறப்பட்டாலும் தற்போது அவற்றில் கிடைப்பது ஏறக்குறைய 1,300 பாடல்கள் மட்டுமே. அவற்றைத் தேடித் தேடி அலைந்து சேகரித்து வெளியிட்டவர்கள் வடக்குப்பட்டு சுப்ரமணியபிள்ளையும் அவரது மகன் வ.சு.செங்கல்வராயரும். தனது வாழ்நாளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்புகழ் ஆராய்ச்சிக்காகச் செலவிட்ட செங்கல்வராயர், சைவத் திருமுறைகளைப் போல திருப்புகழையும் பன்னிரு திருமுறைகளாக வகுத்து உரையெழுதினார். அவற்றை 1950-களில் கோபாலபுரம் மீனாட்சி கல்யாணசுந்தரம் அம்மையார் வெளியிட்டார். பின்பு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் இத்தொகுதிகள் மறுபதிப்பு செய்யப்பட்டன. தற்போது, செங்கல்வராயரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டதையொட்டி அவரது உரையில் அமைந்த திருப்புகழ் மூன்று தொகுதிகளையும் ஸ்ரீசெண்பகா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இத்தொகுதிகளில் முதல் தொகுதி அறுபடை வீடுகளின் அடிப்படையிலும், இரண்டாம், மூன்றாம் தொகுதிகள் பிற தலங்களின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டுள்ளது. தமிழகம், பிற மாநிலங்கள், இலங்கை என்று மொத்தம் 217 தலங்களைப் பற்றி பாடப்பட்ட பாடல்கள் இவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலுக்கு முன்பு அதற்கான சந்தத்தையும் பாடலையடுத்து அதன் விரிவான பொருளையும் மேற்கோள்களையும் அளித்துள்ளார் செங்கல்வராயர். இசை இலக்கியமாகவும் பக்தி இலக்கியமாகவும் ஒருசேர விளங்கும் திருப்புகழுக்கு மிகச் சிறந்த உரை இது என்று தமிழறிஞர்களால் கொண்டாடப்படுகிறது. மூன்றாம் தொகுதியின் பிற்சேர்க்கையாக ‘திருப்புகழும் தெய்வங்களும்’ எனும் தலைப்பில் சிவன், திருமால் உள்ளிட்ட பிற தெய்வங்களைப் பற்றி குறிப்புகள் வரும் பாடல்களையும் தொகுத்துள்ளார் செங்கல்வராயர். இந்தப் பிற்சேர்க்கையே தனியொரு ஆய்வு நூலுக்கான தன்மைகளைக் கொண்டது. தமிழிசை இயக்கம் தீவிரமாக இருந்த நாட்களில் தமிழகம் முழுவதும் திருப்புகழ் மாநாடுகளும் அருணகிரிநாதர் விழாக்களும் நடத்தப்பட்டன. செங்கல்வராயரின் திருப்புகழ் உரை மறுபதிப்பு அந்த நினைவுகளை மீட்டெடுக்கட்டும்.
– பி.எஸ்.கவின்
நன்றி: தமிழ் இந்து, 28/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818