திருவாசகம்
திருவாசகம் (பதிக விளக்கம்), ஆ. ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், பக்.248, விலை ரூ.200;
சைவர்களின் தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் திகழ்கிறது மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவாசகம். இறைவனின் திருவருளையே துணையாகக் கொண்டு அருளிச் செய்யப்பட்டதுதான் திருவாசகம்.இந்நூலில், ஒவ்வொரு பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக விளக்கமளிக்காமல், பதிகம் நிறைவு பெறும்போது அந்தந்தப் பதிகத்தின் பொருளை குறைந்த சொற்களில் நிறைவான பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது சிறப்பு.
முதல் பதிகமான சிவபுராணத்துக்குத் தந்திருக்கும் விளக்கத்தில், சிந்தை மகிழ சிவபுராணந் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் என்ற வரிகளுக்கு மற்றொரு நோக்கமும் அடிகளுக்கு உண்டு. உடம்பு இருக்கும் வரையில் பிராரத்த வினையின் தாக்கமும் இருக்கும். பிராரத்தம் சிறிது தாக்கினும் அதனால் இறையின்பம் இடையீடுபடும். பிராரத்தம் முற்றக் கெடுவதற்கு வழி, இறைவனை இடைவிடாது உணர்ந்து நிற்றலேயாம். அதன் பொருட்டுத் தாம் சிவபுராணத்தை உரைத்ததாகக் கூறுகின்றார்.
முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் என்ற அடியில் இக்கருத்தினைக் காணலாம் என்று புதிய விளக்கமளித்துள்ளார் நூலாசிரியர்.அதேபோல, புணர்ச்சிப் பத்து பதிகத்துக்கான விளக்கத்தில், இறைவனது திருவடியை விடாது பற்றிக்கொண்டு நிற்றலைப் பூண்டு கிடத்தல் என்று குறிப்பிடுகிறார். இறைவனைச் சொற்களால் உணர முடியாது.
சொல் இறந்து நின்று உணர்வார்க்கு அவர்தம் அறிவினுள்ளே அவன் இனிப்பான். அவ்வினிமையை, நெல்லிக்கனியைத் தேனைப் பாலை நிறை இன்னமுதை அமுதின் சுவையை (பா.4) அடுக்கிச் சொல்லுகிறார் அடிகள் என்று பொருள் விளக்கமளிக்கிறார் நூலாசிரியர்.
திருவாசகத்தில் தொட்ட இடமெல்லாம் சைவ சித்தாந்தக் கருத்துகள் விரவி இருக்கின்றன. நூலாசிரியரும் சைவ சிந்தாந்தத்தில் நன்கு தெளிந்தவர் என்பதால் சைவ சிந்தாந்த கருத்துகளைக் கொண்டே புதிய விளக்கம் அளித்துள்ளது நூலின் தனிச்சிறப்பு.
நன்றி: தினமணி, 7/9/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818