தோள் சாயும் பொழுது

தோள் சாயும் பொழுது, இ.எஸ்.லலிதாமதி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 80,விலை 60ரூ.

ஆணும், பெண்ணும் நண்பர்களாகவே எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்… பள்ளி வரை அல்லது கல்லூரி வரை… அதற்கும் மேல் திருமணம் வரை… அதிகபட்சம் பேரால் இவ்வளவு தான் கடந்திருக்க முடியும்…

ஆனால், ‘தோள் சாயும் பொழுது’ நாவல், மேற்சொன்ன எல்லாவற்றையும் கடந்த ஆண், பெண் நட்பை நம் மனக் கண்ணில் பிரதிபலிக்கிறது. இளமை காலத்தில், ‘புரியாத உறவு’ உணர்வுடன் இருந்ததை, இருவருக்குமான உறவின் முரண்களை பேசுகிறது.

திருமணத்திற்கு பின் தூய நட்புறவோடு இருப்பதையும், அவர்களது குழந்தைகள் வரை நட்பை கொண்டு சேர்ப்பதையும், சுவாரசியமாய் காட்சிப்படுத்துகிறது. ‘நல்லவனா இருக்கணுமா; பிடிச்சவனா இருக்கணுமா…’ என கணவனையும், நண்பனையும் வித்தியாசப்படுத்துவதில் வித்தியாசப்படுகிறாள் கதையின் நாயகி.

‘தோழி பக்கம் பேசுவதா; மனைவி பக்கம் பேசுவதா…’ எனும் சூழ்நிலையில், இரு உறவுகளையும் கையாளுவதில் கைதேர்ந்தவன் ஆகிறான் கதையின் நாயகன்.
‘தண்டவாளங்கள் நினைவுபடுத்துகின்றன நம் நட்பை…’ என, அவர்கள் பரிமாறிக் கொள்ளும் கவிதைகளில் யதார்த்தம் சிலிர்க்கிறது.

‘பெண்களுக்கே உள்ள பொறாமையா; அல்லது நட்பிற்கே உள்ள பொசசிவ்னெஸ்சா…’ என தோழன் சிந்திக்கும் தருணங்களில், பெண்களின் மனங்களை லேசாய் புரட்டிப் பார்க்க முடிகிறது. விறுவிறுப்பாய் கதையை நகர்த்துகிறார் லலிதாமதி. ‘தோள் சாயும் பொழுது’ நிஜமாகவே நம் தோளில் சாய்ந்து கொள்வதை உணர முடிகிறது.

நன்றி: தினமலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *