உணவே மருந்து
உணவே மருந்து, சீத்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 172, விலை 125ரூ.
இந்நூலாசிரியர் வங்கி மேலாளராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர் சித்த வைத்தியராக இல்லாவிட்டாலும், சித்த மருத்துவம் குறித்த பழைய ஓலைச் சுவடிகளைத் தேடிப் பிடித்து, அவற்றிலிருந்து – அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவ விஷயங்களைத் தொகுத்து, எளிய தமிழ்நடையில் இந்நூலில் எழுதியுள்ளார்.
குறிப்பாக, நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டு, அவற்றை நம் உடல்நிலைக்கும், சுகாதாரத்திற்கும் ஏற்ப முறையாக எடுத்துக் கொண்டால் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் நிறைவாகப் பேணலாம்.
அந்த அடிப்படையிலேயே இந்நூலை உருவாக்கியுள்ளார் ஆசிரியர். இந்நூலில் மங்கலப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், காய்கறிகள் – கீரைகள், விதைகள், கனிவர்க்கம், மூலிகைகள், மொட்டுகள் – மலர்கள், மரங்கள், பொதுக்குறிப்புகள்… என்று 10-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் விபரங்களை தொகுத்துள்ளார்.
இதில் மங்கலப் பொருட்கள் என்றால் உப்பு, மஞ்சள், சந்தனம், எலுமிச்சை, வெற்றிலை, மல்லிகைப் பூ… போன்ற பொருட்கள் உள்ளன. இதில் ஒவ்வொன்றின் மருத்துவக் குணங்களையும் அவற்றைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆரோக்கியத்தையும், அவற்றை அதிகம் பயன்படுத்தினால் ஏற்படும் கெடுதிகளையும் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
இப்படி இந்நூலில் ஒவ்வொரு தலைப்பிலும் உள்ள பொருட்களின் தன்மைகளை விளக்கியுள்ளார். இன்றுவரை நாம் இவற்றின் அருமை பெருமைகளை அறியாமல் இருந்து விட்டோமே என்பதை, இந்நூலைப் படிக்கும்போது உணர முடிகிறது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 7/6/2017.