உணவின்றி அமையாது உலகு

உணவின்றி அமையாது உலகு,  அ.உமர் ஃபாரூக், விகடன் பிரசுரம், பக்கம் 103, விலை ரூ.110.

‘இந்த உலகில் எல்லா போர்களும் தொடங்கிய இடம் உணவுதான். எல்லா உணவுகளையும் நம்மால் இயற்கையைப் பின்பற்றி உற்பத்தி செய்ய முடியும். ஆனால் நாமோ அன்றாட உணவுகளில் கூட நஞ்சைக் கலந்து வைத்திருக்கிறோம்’ என்கிறார் நூலின் ஆசிரியர்.

ஆங்கில மருத்துவரும், அக்குபஞ்சர் மருத்துவத்திலும் தேர்ச்சி பெற்றுள்ள நூலாசிரியர், நம் அன்றாட பயன்பாட்டுப் பொருள்களான பால், சர்க்கரை, எண்ணெய், மசாலாத்தூள் என அனைத்திலும் கலப்படம் செய்யப்பட்டுள்ளதை ஆதாரங்களோடு விளக்குகிறார். மேலும் பலர் விரும்பி உண்ணும் பிராய்லர் கோழி, பரோட்டா, ஐஸ்க்ரீம் பன்னாட்டு குளிர்பானங்கள் ஆகியவற்றில் இருக்கும் அபாயங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.

இப்போது உணவுப் பொருளுடன் எது வேண்டுமானாலும் கலக்கப்படுகிறது; அது உணவாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நோக்கம் வியாபாரமும், அதீத லாபமும் மட்டும்தான்.

தட்டில் உணவு இருந்தால் அதைச் சாப்பிட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விடுகிறோம். ஆனால் நாம் எதைச் சாப்பிடுகிறோம், சாப்பிடுவது ஆரோக்கியமான உணவா அல்லது ரசாயனங்களும், நஞ்சும் கலக்கப்பட்ட உணவா என்று சிந்திக்க வைக்கிறது இந்த நூல். தனிமனித விழிப்புணர்வும், அரசின் பொறுப்புணர்வும் இணைந்தால் முழுமையாக உணவுக் கலப்படத்தில் இருந்து வெளியே வரலாம் என்கிறார் ஆசிரியர்.

ஆரோக்கிய வாழ்வை விரும்பும் அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நூல்.

நன்றி: தினமணி, 18/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *