சாதனை மலர்கள்

சாதனை மலர்கள், தொகுப்பாசிரியர்: மக்கள் குரல் வீ.ராம்ஜீ, மணிவாசகர் பதிப்பகம், பக்.224, விலை ரூ175.

மக்கள் குரல் நாளிதழில் வாரம்தோறும் வெளியான விருந்தினர் குரல் என்ற சிறப்புப் பகுதியில் இடம்பெற்ற 32 பல்துறை வித்தகர்களின் பேட்டி நூலாக்கம் பெற்றிருக்கிறது. இயல், இசை, நாடகம், நாட்டியம், நடிப்பு, கதை, கவிதை, இலக்கியம், பதிப்பு, தயாரிப்பு, மென்திறன், குழந்தை இலக்கியம், பாடலாசிரியர், கதாசிரியர், நாடகாசிரியர், எழுத்தாளர், மனநல ஆலோசகர், அறிவியல் ஆய்வாளர், நூலகர், சமூக ஆர்வலர், பொதுப்பணி ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வழித்தடத்தை சுருக்கமாக தொகுப்பாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

சினிமாப் பாட்டு போய் சேருகிற அளவுக்கு கர்நாடக இசையும், பாட்டும் அடித்தட்டு மக்களைப் போய் சேரவில்லை என்பது உண்மை. அது அனைவரையும் சென்றடைய வேண்டும் என்கிறார் சுதா ரகுநாதன். பெண்களை மட்டுமே கொண்டு மகாலட்சுமி நாடகக் குழுவை வெற்றியுடன் நடத்தி வரும் பாம்பே ஞானத்தின் நெகிழ்ச்சியான ஆன்மிகப் பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது.

இளைஞர்கள் பலரை ஊக்கப்படுத்தி, மேடை ஏற்றிப் பார்த்து மகிழ்பவரும், டிங்காங் சிறுவர் இதழின் பொறுப்பாசிரியருமான புதுவை வி.வெங்கட்ராமன் நிகழ்த்தியுள்ள சாதனைகளும், இலக்கியச்சாரல் இளையவனின் சாதனைகளும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

நூறு நூல்களை எழுதி சாதனை படைத்திருக்கும் இரா. மோகன், மணிவாசகர் இரா.குருமூர்த்தி, முதன்முறையாக எஸ்எம்எஸ் இதழை நடத்திய மின்மினி ஹைக்கூ கன்னிக்கோவில் ராஜா, உழவுக் கவிஞர் உமையவன், பன்முகத் திறமை கொண்ட தாமோதரக்கண்ணன் உள்ளிட்ட இத்தொகுப்பில் இடம் பெற்ற 32 பேரும் அவரவர் துறையில் புரிந்த சாதனைகள் வியப்பையும், நெகிழ்வையும் தருகின்றன. சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறைக்கு இந்நூல் ஒரு வாழ்க்கைக் கையேடு – வரப்பிரசாதம்.

நன்றி: தினமணி, 1-1-2018.

Leave a Reply

Your email address will not be published.