கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.144, விலை ரூ.130.

உலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் நூல். வணிகம், புதையல், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, தேடல் என பல்வேறு காரணங்களுக்காக எத்தனையோ மனிதர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், சரித்திரத்தின் பக்கங்களை வசீகரித்த குறிப்பிடத்தக்க 13 பேரின் பயணங்கள் குறித்து இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

வாஸ்கோடகாமா போர்ச்சுகலில் இருந்து இந்தியாவைத் தேடி செயிண்ட் கேப்ரியல் என்ற கப்பலில் பயணிக்கிறார்; முதல் மூன்று மாதங்கள் நிலமே கண்ணில் படவில்லை. எங்கு திரும்பினாலும் கடலாகவே இருந்தது. ஏறத்தாழ 10,000 கிலோ மீட்டர் கடந்த பிறகுதான் ஒரு துண்டு நிலம் தெரிகிறது; இதையடுத்து 1498-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி அவர் கேரளாவில் உள்ள கோழிக்கோட்டை அடைகிறார். அதாவது இந்தியாவைத் தொட்டு விட்டார். இவரின் வழித்தடத்தைப் பயன்படுத்தி போர்ச்சுகல் பல முன்னேற்றங்களை அடைந்தது. இந்தியா ஒரு காலனி நாடாக மாறுவதற்கும் இந்தப் பயணம் அடித்தளமிட்டது.

 இது மட்டுமல்ல, சீனாவில் 400 அடி நீளக் கப்பல்களை உருவாக்கி 28,000 வீரர்களை ஏற்றிச் சென்ற மாலுமி செங் ஹே; சீனாவை பல ஆண்டுகள் சுற்றி வந்தபோதும் சீனப் பெருஞ்சுவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட எழுதாத மார்கோ போலோ; வீட்டை விட்டு வெளியே செல்லவே தயங்கிய இபின்பதூதா அதற்குப் பின்பு 30 ஆண்டுகள் பயணம் மட்டுமே மேற்கொண்டது; கொலம்பஸின் கண்டுபிடிப்பு தவறானது; அவர் கால் பதித்தது கரீபியன் பகுதிகள்தான் என நிரூபித்த இத்தாலியப் பயணி அமெரிகோ வெஸ்புகி என ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு சுவாரஸ்யமான சரித்திரத்தைச் சொல்கிறது.

இந்தக் கடல் பயணங்கள் நமக்கு கற்றுத் தரும் ஒரு முக்கியமான பாடம், பயணங்கள் ஒருபோதும் முடிவதில்லை என்பதுதான்.

நன்றி: தினமணி, 1-1-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *