மனநிழல் காட்சிகளும் சலனங்களும்

மனநிழல் காட்சிகளும் சலனங்களும், ந.பிச்சமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.120.

புதுக்கவிதை முன்னோடிகளுள் ஒருவரான ந.பிச்சமூர்த்தியின் கவிதையும் அல்லாத, கட்டுரையும் அல்லாத, கதையும் அல்லாத புதுவகை அனுபவத் தெறிப்புகளின் தொகுப்பு இந்நூல். வாழ்க்கையை தன் கவிதைக் கண்களால் மிக நுட்பமாக, அழகாகப் பார்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார் பிச்சமூர்த்தி. அவர் வாழ்வின் நேரடி அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன. கூடவே அவருடைய வாழ்க்கைப் பார்வையும்.
மிகச் சிறு விஷயங்களிலும் கூட, இந்த வாழ்க்கைப் பார்வை வெளிப்படுகிறது.

பிய்ந்து போன செருப்பைப் பற்றிக் கூறும்போது, இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் வழிப்போக்கன் எப்போதும் எந்த நிலையிலும் இதைக் கழட்டி எறியலாம் என்பது, அறிவியல் வளர்ச்சியைப் பற்றிச் சொல்லும்போது, இயற்கையின் அந்தரங்கத்தை விஞ்ஞானம் அறிய அறிய அது திரெளபதையின் துகிலைப் போல் முடிவற்று வளர்கிறது என்பதெல்லாம் சில எடுத்துக்காட்டுகள்.

நூலாசிரியர் உலகில் கண்ட காட்சிகளும், அவை அவருக்கு ஏற்படுத்திய சலனங்களும் நாம் காணும் காட்சிகளாகவும், நமக்கு ஏற்படும் சலனங்களாகவும் மாறிவிட்டதுதான் இந்நூல் நிகழ்த்திய அதிசயம்.

நன்றி: தினமணி, 1-1-2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *