வாதி பிரதிவாதி நீதி
வாதி பிரதிவாதி நீதி, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ந. ராஜா செந்நூர் பாண்டியன், குமுதம் வெளியீடு, வலை 350ரூ.
பாதைகளை ஆக்கிரமித்து கடை நடத்துகிறார்கள். மதுபோதையில் அதிக வேகத்துடன் வாகனங்களை ஓட்டுகிறார்கள். நாம் ஒருவரைப் பற்றி காவல்நிலையத்தில் புகார் செய்யப் போனால் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய மறுக்கிறார்கள்.
இப்படி வாழ்க்கையில் அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ள சட்டம் எந்த வகையில் உதவி செய்ய முடியும்? இப்படிப்பட்ட பிரச்னைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்ட தீர்ப்புகள் எவை? என்பன போன்றவற்றை மிக எளியமுறையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.
ஒவ்வொரு பிரச்னையையும் ஒரு சிறுகதை போலச் சொல்லி, அது தொடர்பான வழக்கு விவரங்கள், அதற்கான தீர்ப்புகள் எல்லாவற்றையும் சொல்லி சாதாரண மனிதர்களும் சட்ட அறிவு பெற உதவியுள்ளார் நூலாசிரியர்.
உதாரணமாக, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் சிறைத் தண்டனை தர வேண்டும் என்ற தீர்ப்பு, ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மருத்துவமனையும் சிகிச்சை அளிக்க மறுக்கக் கூடாது; எல்லாக் கடைகளிலும் ஆசிட் விற்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்ற தீர்ப்பு,
காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகளைச் சொன்ன தீர்ப்பு உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரச்னைகளுக்கான தீர்ப்புகளைப் பற்றிச் சொல்லும் சிறந்த பயனுள்ள நூல்.
நன்றி: தினமணி, 17/7/2016.