வைணவக் கலைச்சொல் அகராதி

வைணவக் கலைச்சொல் அகராதி, தெ.ஞான சுந்தரம்,சந்தியா பதிப்பகம், பக்.228, விலை ரூ.220.

தமிழ் வைணவ நூல்களுக்குத் தனித்துவமான மொழி உண்டு. வைணவ சமய சிந்தனைகளை தமிழில் அளிப்பதில் புதிய நயங்கள், சொல்லாடல்கள் ஆகியவற்றுக்குத் தனி வரலாறு உண்டு. இந்நூலாசிரியர் வடித்த ஓர் வைணவ ஆய்வு நூலின் பகுதியாக வைணவ அருந்தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் தொகுத்தார். அப்பகுதியின் மறுபதிப்பு இந்த நூல். பின்னிணைப்பாகப் பாராட்டைப் பெற்ற பகுதி தனி நூலானதும் வலுவிழந்ததாகவே உள்ளது.

அருந்தமிழ்ச் சொல் அகர வரிசையில் உரப்பு என்கிற சொல்லுக்கு ‘உறுதி’ என இன்று பொருள் கூறியிருக்க முடியும். ஆனால் இந்த நூல் அதனை அழுத்தம் என்று கூறுகிறது. உறுதிப்பாடு என்ற சொல்லுக்கு திண்மை என்று அளிக்கப்பட்டுள்ளது.

இதில் உறுதிப்பாடே மிக எளிதில் விளங்கும் சொல்லாக உள்ளது, திண்மை அன்றாட வழக்கில் இல்லாதது. நூல் வழக்கிலும் அரிதாகி வருகிறது. உருக்கி என்பதற்கு நீர்ப்பிண்டமாக்கி என்ற பொருள் போதிய விளக்கமாக இல்லை. காலத்துக்கேற்ற மொழியின் விரிவு புதிய பதிப்பில் விடுபட்டுப் போனதற்கு இவை எடுத்துக்காட்டுகள்.

1987-இல் வெளியான தொகுப்பின் பின்னிணைப்பாக வெளியான பகுதியை மூன்று பதிற்றாண்டுகள் கழித்து மாற்றமும் சேர்த்தலுமின்றித் தனி நூலாகக் கொணர்வதால் காணக் கூடிய குறைகள் இவை. முப்பதாண்டு காலம் என்பது ஆழ்ந்தாராய்ந்து புதிய அகராதியே தொகுக்க ஆகிவிடும் காலமல்லவா?

பொருளுக்குத் தரும் மேற்கோள் நூல்கள், பகுதிகள் பற்றிய விவர விளக்கங்கள் பின்குறிப்பாக, அடிக்குறிப்பாகத் தரப்படவில்லை. அகராதி தொகுப்பில் பல முன்னோடிகள் உண்டு. மறுபதிப்பில் பழையதை மேம்படுத்தியிருக்கலாம். ம.பெ.சீனிவாசனின் முன்னுரை அகராதி வரலாறாக அமைந்துள்ளது அருமையானது, செறிவானது.

நன்றி: தினமணி, 11/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *