வைதீஸ்வரன் கதைகள்
வைதீஸ்வரன் கதைகள், எஸ்.வைதீஸ்வரன், கவிதா பப்ளிகேஷன், பக்.304, விலை ரூ. 225
தமிழில் புதுக்கவிதையின் மறுமலர்ச்சிக் காலத்தில் கவனிக்கத்தக்க கவிஞராக அறிமுகமானவர் எஸ். வைதீஸ்வரன். பிறகு சிறுகதைகளையும் எழுதத் தொடங்கினார். அவர் சிறந்த நவீன ஓவியரும்கூட.
அந்த வகையில் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் பலவும் ஒரு கவிஞனின், ஓர் ஓவியனின் மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
“பிம்பம்’ என்ற கதை ஒரு மூதாட்டியைப் பற்றியது. “கதையாக’ அது தொடங்கினாலும், முடியும்போது அதற்கு ஒரு கவித்துவம் வந்துவிடுகிறது. அந்தக் கவித்துவ அம்சம்தான் நம் நெஞ்சைத் தொட்டு நிற்கிறது.
இவரது எழுத்து பாணி என்பது சம்பவங்களின் அடுக்குகள் என நின்றுவிடுவதில்லை. “கனவில் கனவு’ சர்ரியலிச வகையைச் சேர்ந்தது. கிராமப்புறத்தில் இளமைக்கால அனுபவங்களும் இவருடைய கதைகளுக்கு முக்கியப் பின்புலம்.
“மோதிர விரல்’ அசாதாரணமான வாழ்க்கைப் பார்வையை சுலபமாகச் சொல்லிவிட்டுப் போகிறது.
வைதீஸ்வரன் கதைகள் என்ற பெயர் கொண்டிருந்தாலும் இது அவருடைய சிறுகதைகளின் முழுத் தொகுப்பு அல்ல. 1960-களிலிருந்து தற்போது வரையிலான 34 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இந்தப் புத்தகம்.
கவிதைகள் – அதிலும் புதுக்கவிதைகள் – கவிஞனின் ஆழ்மனதைச் சுருங்கச் சொல்வன. ஓவியமும் ஒரு கட்டத்துக்குள் ஓவியனின் மன உலகை அடக்க முயற்சிக்கிறது.
இந்த இரண்டு அம்சங்களையும் கவிஞரும் ஓவியருமான வைதீஸ்வரனின் கதைகளில் காணலாம்.
நன்றி: தினமணி, 25/7/2016