வளரும் ஒலிபரப்புக்கலை
வளரும் ஒலிபரப்புக்கலை, கோ. செல்வம், விஜயதிருவேங்கடம், வானதி பதிப்பகம், பக். 224, விலை 150ரூ.
சோ.சிவபாதசுந்தரம் 1954 இல் எழுதிய “ஒலிபரப்புக்கலை‘’ என்ற நூலின் தொடர்ச்சியாக – அதன் வளர்ச்சிநிலையாக – இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஒலிப்பரப்புத்துறையில் நீண்ட காலம் அனுபவம் பெற்ற நூலாசிரியர்கள் இந்த நூலை எழுதியுள்ளார்கள்.
ஒலிபரப்புத்துறையின் பல்வேறு அங்கங்களை இந்நூல் விரிவாக விளக்குகிறது.
வானொலி அறிவிப்பாளர் அல்லது தொகுப்பாளர் குரல் வளம், நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, சேர்ந்திசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்விதம், வானொலிக்கு எழுதும் முறை, வானொலிப் பேச்சின் தன்மை, வானொலி நேர்காணலின் போது நேர்காணல் எடுப்பவர் செய்ய வேண்டியவை, வானொலி பட்டிமன்றங்களை நடத்தும்முறை, வானொலி நாடகங்களின் வகைகள், கல்வி ஒலிபரப்பு, சிறுவர் நிகழ்ச்சிகள், மகளிர் நிகழ்ச்சிகள், வேளாண் நிகழ்ச்சிகள் என வானொலி சார்ந்த அனைத்து விஷயங்களும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.
அகில இந்திய வானொலியில் அனுமதிக்கப்படுபவை, அனுமதிக்கப்படாதவை, இன்றைய நாளில் கணினித் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வானொலி ஒலிபரப்புக்கு உதவுகிறது? என்பன போன்ற விஷயங்களும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
வானொலி ஒலிபரப்புத்துறையில் அனுபவம் நிறைந்த நூலாசிரியர்கள் எழுதியுள்ள இந்நூல், இதழியல் மாணவர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் பயன்படும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி, 23/1/2017