எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு

எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு, ஜோ.சம்பத் குமார், நெய்தல் பதிப்பகம், பக்.208, விலை ரூ.130.

“பிரான்சில் ஒயிட் எல்லீஸ்‘’ தமிழ் ஒலிக்கேற்ப தன் பெயரை “எல்லீசன்‘’ என்று மாற்றிக் கொண்டவர். திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இவர், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறைத் துணைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், மசூலிப்பட்டின மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்டிரேட், நிலத்தீர்வை ஆட்சியர், சென்னை ஆட்சியர் முதலிய பல உயர் பதவிகளை வகித்தவர். தம் வாழ்நாளில் பெரும் பகுதியைச் சென்னையில் கழித்தவர்.

திருக்குறள் மேல் கொண்ட விருப்பத்தால், திருவள்ளுவரின் உருவம் பொறித்த இரண்டு தங்க நாணயங்களை (வராகன்) வார்த்த பெருமைக்குரிய இவரது வாழ்வியலின் பின்புலம், திருக்குறள் ஆய்வு, மொழி ஆய்வு, யாப்பியல் ஆகிய நான்கு இயல்களாக வகைப்படுத்தி இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

எல்லீஸின் வாழ்வியல் பின்புலத்தை முதல் இயலும்; எல்லீஸ் சென்னை மாவட்ட ஆட்சியாளராக இருந்தபோது அவர் திருக்குறளுக்கு எழுதிய மொழிபெயர்ப்பு, உரை பற்றியதை “திருக்குறள் ஆய்வு’‘ எனும் இரண்டாவது இயலும்; எல்லீஸ் தமிழ்மொழி மீது வைத்திருந்த ஆர்வத்தால் பல பகுதிகளிலிருந்தும் ஓலைச் சுவடித் தகவல்களைத் திரட்டியதோடு ஆங்கிலேயர்களுக்குப் பயிற்றுவிப்பதற்காக ஒரு கல்வி நிறுவனத்தையும் நிறுவி, மொழி ஆய்வை மேற்கொண்டதை “மொழி ஆய்வு’‘ எனும் மூன்றாவது இயலும்; எல்லீஸ் தமிழ் கற்க வரும் இளநிலைப் பணியாளர்களுக்குத் தொடக்கத்தில் யாப்பு கற்றுக் கொடுப்பதற்காக எழுதிய எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றின் இலக்கணங்கள், பா வகைகள், பண்பாட்டுக் குறிப்புகள் முதலியவற்றை “யாப்பியல்’ எனும் நான்காவது இயலும் ஆராய்ந்துள்ளன.

எல்லீஸ் பற்றி எழுதியோரின் கட்டுரைகள், எல்லீஸின் கையெழுத்துப் பிரதிகள், கல்வெட்டுகள், நாளிதழில் வெளிவந்த செய்திகள், மூல நூல்களின் முகப்புப் பக்கங்கள் முதலியவை பின்னிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. எல்லீûஸப் பற்றிய நேரிடையான ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்னும் மிகப்பெரிய குறையை இவ்வாய்வு நூல் போக்கியுள்ளது.

நன்றி: தினமணி, 23/1/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *